வி-ரை:இதனால் இது விளைந்தது என்று அறிவிப்பது ஞாபக ஏதுவாம். ஞாபகம் - அறிவிப்பது.
இ-ள்: மகளிரின் நெற்றி வியர்க்கவும், வாய்துடிக்கவும், பக்கம் வளைந்த புருவங்களாகிய விற்கள் மேற்சென்று வளையவும், வாட்படையும் தோற்கும்படியான கரிய, நீண்ட, நீலமலர் போன்ற கண்கள் சிவக்கவும் உள்ளதன் கருத்து, அவர் தம்முடைய கணவன் மீதுள்ள ஊடல் மிகுதியைக் காட்டுவதாகும் என்பதாம்.
நுதல் வியர்த்தல், வாய் துடித்தல், புருவம் வளைதல், கண் சிவத்தல் ஆகிய காரணங்கள், அப் பெண்களுக்கு உள்ள ஊடல் மிகுதியை அறிவிப்பதால் ஞாபக ஏதுவாயிற்று.
அபாவவேது
60. அபாவந் தானும் அதன்பாற் படுமே.
எ-ன், இதுவும் அவ்வலங்காரத்தின் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.
இ-ள்: அபாவமாவது ஒன்றனது இன்மை; அதுவும் அவ்வேதுவின் பாற்படும் எ-று.
அதன் வகை
61. என்றும் அபாவமும் இன்மைய தபாவமும்
ஒன்றினொன் றபாவமும் உள்ளத னபாவமும்
அழிவுபாட் டபாவமும் எனஐந் தபாவம்.
எ-ன், அபாவத்தை விரித்து உணர்த்துதல். நுதலிற்று.
இ-ள்: என்றும் அபாவம் முதல் அழிவுபாட்டு அபாவம் ஈறாகச் சொல்லப்பட்ட ஐந்து பகுதியை உடையதாம் அவ்வபாவம் எ-று
எனவே இவ்வைந்து அபாவமும் ஏதுவாகத் தோன்றுவது அபாவ ஏதுவாம் என்றவாறு.
அவற்றுள், (க) என்றும் அபாவம் என்பது எக்காலத்தும் இல்லாமை.
எ-டு: 'யாண்டு மொழிதிறம்பார் சான்றவர் எம்மருங்கும்
ஈண்டு மயில்கள் இனமினமாய் - முண்டெழுந்த
காலையே கார்முழங்கும் என்றயரேல் காதலர்தேர்
மாலையே நம்பால் வரும்'
இ-ள்: இன்று காலையின்கண் இவ்விடத்து மயில்கள் கூட்டங் கூட்டமாய்ச் சேர்ந்தெழுந்து அகவா நின்றன; அதுபற்றிக் கார் முழங்கா நிற்குமென்று வருந்தா தொழிக; அறிவால் நிறைந்தோர் எக்காலத்தும் சொன்னசொற் பிறழார், ஆதலால் அன்னராகிய நம்முடைய காதலர் தேரானது மாலையிலே நம்மிடத்தில் வரும் எ-று.
வி-ரை:அபாவம்-இன்மை. ஒரு வினை நிகழ்ச்சிக்கு எக்காலத்தும் இல்லாத தன்மையை ஏதுவாகக் கூறி விளக்கின், அது என்றும் அபாவமாம்.