(4) உள்ளதன் அபாவம் என்பது ஓரிடத்தும் ஒருகாலத்தும் உள்ள பொருள்,பிறிதோரிடத்தும் பிறிதொரு காலத்தும் இல்லாமை,
எ-டு: 'கரவொடு நின்றார் கடிமனையிற் கையேற்(று)
இரவொடு நிற்பித்த தெம்மை - அரவொடு
மோட்டாமை பூண்ட முதல்வனை முன்வணங்க
மாட்டாமை பூண்ட மனம்'
இ-ள்: இரப்போர்க்குப் பயந்து காவல் கொண்டிருப்பவருடைய வீட்டிற்போய் எங்களைக் கையேற்று இரந்து நிற்கும் படி செய்தது பாம்பையும் பெரிய ஆமையோட்டையும் அணியாகக் கொண்ட பரமசிவனை முற்பிறப்பில் வணங்கமாட்டாமையைக் கொண்ட மனம் எ-று.
மோட்டாமை - பெரிய ஆமை. மாட்டாமை பூண்ட - மாட்டாமையைத் தொடங்கின.
வி-ரை:இப்பாடற்கண் கூறப்பட்ட பொருள் மனம் ஆகும். இப்பிறவியில், கரவினையுடைய பொருளாளரிடத்துச் சென்று வணங்கும் வணக்கம் `உள்ளது' என்பதாகும். இவர்களிடத்து வணங்கும் உள்ளம் முற்பிறவியில் இறைவனிடத்துச்சென்று வணங்காததாயிற்று என்பது அதன் அபாவமாகும். இங்ஙனம் இப்பொழுது இரக்க நேர்ந்தமைக்குக்காரணம் இறைவனை முன்பு வணங்காமையே என்பதால் ஏதுவாயிற்று.
ஒரிடம் - கரப்பவரிடம். ஒரு காலம் -இப்பிறப்பு. உள்ள பொருள் - வணங்கும் உள்ளம். பிறிதோரிடத்து - இறைவனிடத்து. பிறிதொரு காலம்-முற்பிறவி. இல்லாமை- வணங்காமை.
(5) அழிவுப்பாட்டு அபாவம் என்பன முன்பு உள்ளது அழிவுபட்டு இலதாதல்.
எ-டு: 'கழிந்த(து) இளமை களிமயக்கந் தீர்ந்த(து)
ஒழிந்தது காதல்மேல் ஊக்கம் - சுழிந்து
கருநெறியுங் கூந்தலார் காதல்நோய் தீர்ந்த(து)
ஒருநெறியே சேர்ந்த(து) உளம்'
இ-ள்: முதுமைப் பருவம் வந்தது; செல்வத்தினால் வரும் மனக்களிப்பாகிய அறியாமையும் நீங்கிற்று; காதலிக்கப்பட்ட பொருள்களைத் தலைப்படவேண்டி எழாநின்ற ஊக்கமும் ஒழிந்தது; சுருண்டு நெறிப்பையுடைய கரிய கூந்தலார் மேல் வைத்த ஆசையாகிய நோயும் தீர்ந்தது; ஒரு தன்மைத்தாய சித்தியைச் சேர்ந்தது என் உள்ளம் எ-று.
வி-ரை: இப்பாடற்கண் இளமை, மயக்கம், ஊக்கம், காதல் என்பது முன்பு இருந்து அழிந்தன என்பதால் அழிவுபாட்டபாவ மாயிற்று. இவற்றை மனம் ஒரு நெறிப்பட்டது என்பதால் அவை ஏதுவாயிற்று.