பொருளணியியல்131

சித்திரவேது

62. தூர காரியமும் ஒருங்குடன் தோற்றமும்
காரண முந்துறூஉங் காரிய நிலையும்
1யுத்தமும் அயுத்தமும் முத்தையோ டியலும்.

எ-ன், இதுவும் அவ்வேது அலங்காரத்தினையே பிறிதொரு வகையால் வகுத்து உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: தூரகாரியம் முதல் அயுத்தம் ஈறாகச் சொல்லப்பட்ட இவ்வைந்தும் முன்னைய ஏது அலங்காரத்தோடு நடக்கும் எ-று.

'முந்தை' என்பது 'முத்தை' என வலிந்து நின்றது.

வி-ரை: சித்திர ஏது - ஆச்சரியத்தைத் தரத்தக்க ஏது.

அவற்றுள் (க) தூரகாரியவேது என்பது ஒருவழிக்காரணம் நிகழப், பிறிதொருவழிக் காரியம் நிகழ்வது.

எ-டு: 'வேறொரு மாதர்மேல் வேந்தன் நகநுதியால்
ஊறுதர இம்மா(து) உயிர்வாடும் - வேறே
இருவரே மெய்வடிவில் ஏந்திழை நல்லார்
ஒருவரே தம்மில் உயிர்.

இ-ள்: தலைமகளாயினாள் தன்னை யொழித்து ஒரு காதலி மார்பகத்தே வேந்தன் நகத்தின் நுனியினாற் குறியிட, அதுகண்டு அழுது வருந்துவாள்; ஆதலால். இவ்வேந்திழை நல்லார் உருவத்தால் இருவர் எனினும், உயிரானது இவர்கட்கு ஒன்றே போலும் எ-று.

ஒருமாது - தலைவி. வேறொரு மாது - பரத்தை. 'இருவரே ஏந்திழை நல்லார்' என்றது தலைமகளையும், பரத்தையையும்.

வி-ரை: 'தென்னை மரத்தில் தேள்கொட்ட, பனைமரத்தில் நெடியேறியது போல, என்பது வழக்கில் கூறப்படும் பழமொழியாகும். இவ்வேது அதைப் போன்றதாகும்.

பரத்தையின் மார்பைத் தன் நகத்தின் நுனியால் தலைவன் வருட, அதனால் தலைவி வருந்தினள் என்பது இங்குக் கூறப்படும் பொருளாகும். நகத்தால் ஊறுபட்டவள் பரத்தை; எனவே அவளே அதற்கு (அச்சிறுபுண்ணிற்கு) வருந்த வேண்டும். அங்ஙனமாகத் தலைவி வருந்தினாள் என்றலின், இது தூரகாரிய நிகழ்ச்சியாயிற்று. தலைவன் கை நகம் பரத்தையின் மாட்டுப் பட்டதால் தலைவி வருந்தினள் என்பதால் இது ஏதுவாயிற்று.

தலைவனுடைய பரத்தைமையையும், தலைவியினுடைய ஊடலையும் நாகரிகமாக இப்பாடல் விளக்குகின்றது,

(2) ஒருங்குடன் தோற்றவேது என்பது காரணமும் காரியமும் ஒக்க நிகழ்வது.

எ-டு: 'விரிந்த மதிநிலவின் மேம்பாடும் வேட்கை
புரிந்த சிலைமதவேள் போரும் - பிரிந்தோர்
நிறைதளர்வும் ஒக்க நிகழ்ந்தனவால் ஆவி
பொறைதளரும் புன்மாலைப் போழ்து'


1. 'யுக்தமும் அயுக்தமும்' என்பதும் பாடம்.