பொருளணியியல்133

வி-ரை: யுத்தம் - பொருத்தம்; காரணத்திற்குப் பொருத்தமான காரியம் நிகழ்வது. யுக்தம் என்பது யுத்தம் என்றுயிற்று.

இப்பாடற்கண் சோழனின் கைவேலிலிருந்து வரும் ஒளியாகிய நிலவினைக் கண்டு பகையரசர்களுடைய கைகளாகிய தாமரை குவியும் என்றதால் யுத்த ஏதுவாயிற்று. சந்திரனைக்கண்டு தாமரை குவிதல், இயல்பாதலின், இது காரணத்திற்கேற்ற காரியமாயிற்று.

(5) அயுத்தவேது என்பது காரணத்திற்கு ஏலாத காரியம் நிகழ்வது.

எ-டு: 'இகன்மதமால் யானை அனபாயன் எங்கோன்
முகமதியின் மூரல் நிலவால் - நகமலர்வ
செங்கயற்கண் நல்லார் திருமருவு வாள்வதன
பங்கயங்கள் சாலப் பல.

இ-ள்: வெற்றியையும், மதத்தையும் உடைய உயர்ந்த யானைகளையுடைய அனபாயனாகிய எம் அரசனுடைய முகமாகிய நிறைமதியின்கண் உண்டாகிய முறுவலின் வெண்ணிலவினால், செவ்வரியை யுடைய கயல் போன்ற கண்ணினையுடைய நல்லாருடைய திருமருவு வாண்முகமாகிய தாமரைகள் பல விளங்க மலர்கின்றன எ-று.

வி-ரை: அயுத்தம் - பொருத்தம் இல்லாதது; காரணத்திற்குப் பொருந்தா காரியம் நிகழ்வது.

சோழனின் முகமாகிய மதியத்தின் ஒளியால், பெண்களின் முகமாகிய தாமரைகள் மலர்கின்றன என்பதால் அயுத்த ஏதுவாயிற்று. நிலவினைக்கண்டு தாமரை குவிதல் பொருத்தமே யன்றி மலர்தல் பொருத்தமில்லை. ஆதலின் இது காரணத்திற்கு ஏலாத காரிய மாயிற்று.

'முடியும்' என்னாது 'இயலும்' என்றதனாள், பிறவாற்றான் வருவனவுங் கொள்க.

ஐயவேது


எ-டு : 'முடியும் உமைவாய் மழலை மொழியாலோ
ஓது மறையின் ஒலியாலோ - யாதாலோ
கோலம் இருதிறனாக் கொண்டான் திருமிடற்றின்
ஆலம் அமிர்தான வாறு.

(இ-ள்) உமையாளுடைய வாயிலுள்ள அழகிய மழலைச் சொல்லாகிய அமிர்தத்தைச் செவியாற் பருகிய அதனாலோ, அன்றியே தானோதப்பட்ட வேத மந்திர ஒசைத் தழைப்பினாலோ, இவ்விரண்டனுள்ளும் எதனாலோ? இரண்டு வடிவமாகத் திருமேனியைக் கொண்ட பரமசிவனுடைய சிறந்த மிடற்றிலுள்ள நஞ்சம் அமிருதமாயவாறு; தெரியாது எ-று.

ஒலி - தழைப்பு, இருதிறம் - உருவமும், அருவமும், இது ஐயவேது பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க.

வி-ரை: இப்பாடற்கண் இறைவன் திருமிடற்றிலுள்ள ஆலம் அமிர்தமானதற்குக் காரணம், உமையின் மழலை மொழியோ, அல்லது மறைபின் ஒலியோ, அன்றி யாதாலோ என ஐயுற்றவாறும், அவ்வகையான் அவை ஏதுவாயினவாறும் காண்க.