பொதுவணியியல்17

' விரவலராய் ' என்ற பாடல் பிரிவாற்றாத தலைவியின் ஆற்றாமைக்கிரங்கிய தோழி கடலை நோக்கிக் கூறியதாகும் . இதன்கண் இடையினமாகிய ஓரினமே வந்தும் , வகர வெழுத்துப் பின்னும் பின்னும் வந்தும் இருத்தல் பற்றிக் கௌடர் விரும்புவர். (16)


உ.தெளிவு

17. தெளிவெனப் படுவது பொருள்புலப் பாடே .

எ-ன் தெளிவாமாறு உணர்த்துதல் நுதலிற்று .

இ-ள்: தெளிவென்று சொல்லப்படுவது கவியாற் கருதப்பட்ட பொருள் , கேட்போர்க்கு உளங்கொண்டு விளங்கத் தோன்றுவது எ-று.

எ-டு: ' பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும் ' (குறள் -314)

இவ்வாறு தொடுத்தால் கவியருமையும் நோக்குடைப் பொருள் கோளுமின்றித் தோன்றுமென இந்நெறி விரும்பாது ,

பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று ' (குறள் - 297)

எனத் தொடுப்பனவே சுவையுடைய வென்று சொல்லுவர் கௌடர் .

வி-ரை: ' பிறக்கின்னா ' என்பதன் பொருள் : பிறர்க்கு இன்னாதவற்றை ஒருவன் ஒரு பகலின் முற்பகுதியிற் செய்தால் , அத்தீமைகள் அவனுக்கு அப்பகலின் பிற்பகுதியிலேயே தாமாக வந்துவிடும் என்பதாம் .

இங்ஙனம் பாடலைப் படித்த அளவிலேயே பொருள் எளிதில் விளங்குதலின் இது தெளிவாயிற்று .

' பொய்யாமை ' என்பதன் பொருள் : ஒருவன் பொய் கூறாமையையே பொய் கூறாமையையே எப்பொழுதும் செய்ய வல்லவனாயின் , அவன் வேறு பிற அறங்களைச் செய்யாமையே செய்யாமையே நல்லது என்பதாம் . எனவே பல அறங்களைச் செய்தலினும் , பொய்யாமை யென்ற ஓரறத்தினையே செய்தல் தக்கதாம் . அவை யனைத்தும் தரும்பயனை ஈதோ ரறமே தந்துவிடும் என்பது கருத்து . அடுக்கிரண்டனுள் முன்னையது இடைவிடாமை மேற்று ; ஏனையது துணிவின் மேற்று .

இங்ஙனம் பொருள் எளிதில் விளங்காது அரிதின் உணருமாறு இருப்பதையே கௌடர் விரும்புவர் . நோக்குடைப் பொருள்கோள் - கவிஞனின் ஆழமான உள்ளக் கருத்து . (17)


3. சமநிலை

18. விரவத் தொடுப்பது சமநிலை யாகும் .

எ-ன் சமநிலை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று .

இ-ள் : வன்மை , மென்மை ,இடைமை என்னும் மூவினமும்
தம்முள் விரவத் தொடுப்பது சமநிலையாம் எ-று .

எ-டு: ' சோக மெவன்கொ லிதழிபொன் றூக்கின சோர்குழலாய்
மேக முழங்க விரைசூழ் தளவங் கொடியெடுப்ப
மாக நெருங்கவண் டானங் களிவண்டு பாடவெங்கும்
தோகை நடஞ்செயு மன்பர்திண் டேரினித் தோன்றியதே'