(இ-ள்) நான்ற குழலினை யுடையாய் ! கொன்றைகளானவை பொன்மாலை நாற்ற , மேகங்கள் முழவென முழங்காநிற்ப , விரையுடைய மலரோடு கூடிய முல்லை பலவும் கொடியெடாநிற்ப , அழகிய தானத்திலே வண்டுகள் களித்துப்பாட , எப்பக்கமும் மயில்கள் ஆடாநின்றன ; இதனாலே ,இப்பொழுதே நம்முடைய தலைவர் ஏறிய தேர் வந்து அவரோடு தோன்றுவதாயிருந்தது ; அதனாலே , நின்னுடைய வருத்தம் எங்கே போகக்கடவது ? என்றவாறு .
மாகம் - ஆகாயம் . வண்தானம் வண்டானம் எனத் திரிந்தது . சோகம் - வருத்தம் . இதழி - கொன்றை . விரை - நாற்றம் . தளவம் - முல்லை .தோகை - மயில் .
' சோகமெவன் சொல் ' என்று பாடமோதி அதற்கேற்பச் ' சோகம் என் ?' என நிறுத்தி வினாவாக்குவாரு முளர் .
இனிக் கௌடநெறி வருமாறு :
' இடர்த்திறத் தைத்துற பொற்றெடி நீயிடித் துத்தடித்துச்
சுடர்க்கொடித் திக்கனைத் திற்றடு மாறத் துளிக்குமைக்கார்
மடக்குயிற் கொத்தொளிக் கக்களிக் கப்புக்க தோகைவெற்றிக்
கடற்படைக் கொற்றவன் பொற்கொடித் தேரினிக் கண்ணுற்றதே '
என வற்கெனத் தொடுப்பனவே விழுமியவென வேண்டுவர் கௌடர் .
(இ-ள்) பொன்னாற் செய்யப்பட்ட தொடியினையுடையாய் ! இருண்ட , நிறத்தையுடைய மேகமானது முழங்குவதுஞ் செய்து , மின்னாகிய ஒளியோடுங் கூடிய ஒழுங்கு பல திக்கினுந் தோற்றி நடுங்க , மழையைத் தராநின்றது ; அதுவேயுமன்றி , மடப்பத்தையுடைய குயில் திரள்கள் ஒளிக்கக் , களிக்கத் தொடங்காநின்றன மயில்களானவை ; ஆதலால் வெற்றி
கொண்ட கடல் போன்ற பெருமை யுடைத்தாகிய தானையையுடைய தலைவனேறிய பொற்கொடியை யுடைய தேரானது இப்பொழுதே வந்து நம்மைச் சேர்வதா யிருந்தது ; நீ வருத்தம் ஒழிவாயாக என்றவாறு .
இடர் - வருத்தம் . இடித்தல் - முழங்குதல் . தடித்து - மின் .சுடர் - ஒளி . கொடி - ஒழுங்கு . தடுமாறுதல் - நடுங்குதல் . துளித்தல் - மழை பெய்தல் . மைக்கார் - கரியமேகம் . மடம் - அறியாமை . கொத்து - திரள் .தோகை - மயில் . கடற்படை - கடல் போன்ற பெரிய சேனை . கொற்றவன் - தலைவன் . இனி - இப்பொழுது . கண் - இடம் . உறுதல் - சேர்தல்.
இச்சூத்திரங் கூறாக்கால் மேல் , ' செறிவு ' என்று கூறியவதனானே நெகிழத் தொடாமையேயன்றி வற்கெனத் தொடுப்பினும் , செறிவென்று வைதருப்பருக்குங் கொள்ளக் கிடக்கும் .
வி-ரை: ' சோகமெவன் கொல் ' என்ற பாடல் பருவங் குறித்து வாராத தலைவனை நினைந்து ஆற்றாளாய தலைவிக்குத் தோழி , தலைவன் வரவு கூறி ஆற்றுவித்தது . இப்பாடலில் மூவினங்களும் விரவியுள்ளமையின் சமநிலையாயிற்று .
' இடர்த்திறத்தைத்துற ' என்ற பாடலும் முன்னைய துறையைச் சேர்ந்ததாகும் . இப்பாடலில் வல்லோசை மிக்கிருத்தல் காண்க . வற்கெனத் தொடுத்தல் - வல்லோசை மிகுமாறு செய்தல் .