செறிவில் நெகிழ்ந்த இசையின்றி வருதலையும் இதன் கண் மூவினங்களும் விரவத் தொடுத்தலையும் வைதருப்பர் விரும்பவே , அவர் மிகவும் வற்கென்ற ஓசையோ , மிகவும் நெகிழ்ந்த ஓசையோ இன்றி இடைப்பட்ட ஓசையையே விரும்புதல் கருத்தாதல் தெளியலாம் . ஆனால் கௌடர் வல்லோசை , மெல்லோசை யென்பதன்றி , எவ்வினமாயினும்
ஓரினமான எழுத்துக்களால் வருவதையே விரும்புதல் தெளியலாம் . (18)
4. இன்பம்
19. சொல்லினும் பொருளினும் சுவைபடல் இன்பம் .
எ-ன் இன்பம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று .
இ-ள்: சொல்லினாற் சுவைபடத் தொடுத்தலும் , பொருளினாற் சுவைபடத் தொடுத்தலும் இன்பமாம் எ-று.
அவற்றுள் , சொற்காரணமாகிய இன்பமாவது வழிமோனை முதலாயின வரத்தொடுப்பது.
எ-டு. `முன்னைத்தஞ் சிற்றில் முழங்கு கடலோத மூழ்கிப் போக
அன்னைக்கு ரைப்ப னறிவாய் கடலேயென் றலறிப் பேருந்
தன்மை மடவார் தளர்ந்துகுத்த வெண்முத்தந் தயங்கு கானற்
புன்னையரும் பேய்ப்பப் போவாரைப் பேதுறுக்கும் புகாரே யெம்மூர்'
இ-ள்: முன்பு தம்முடைய சிறுவீடானது ஒலிக்கின்ற கடல் வெள்ளத்தில் மூழ்கிப் போக , அதைக்கண்டு ' என்னுடைய அன்னைக்குச் சொல்லுவேன் ,கடலே ! அறிவாயாக ' என்று அலறி யோடுகின்ற தன்மையினையுடைய பெண்கள் கானலின்கண் வருந்தி அறுத்துச் சிதறிய வெண்மையான முத்தம் பிராசிக்கின்ற புன்னை யரும்பை யொப்பாக ஆண்டுப் போவாரை மயங்கச் செய்கின்ற காவிரிப்பூம்பட்டினமே எம்மூர் எ-று.
இத்துணைச் சுருங்கத் தொடுப்பது இன்னாதென்று கௌடர் சொல்லுமாறு :-
எ-டு: ' 1 துணைவருநீர் துடைப்பவராய்த் துவள்கின்றேன்
துணைவிழிசேர் துயிலை நீக்கி
2இனவளைபோல் இன்னலஞ்சோர்ந் திடருழப்ப
3இறந்தவர்நாட் டில்லை போலும்
தனியவர்கள் தளர்வெய்தத் தடங்கமலந்
தளையவிழ்க்குந் தருண வேனில்
4பனிமதுவின் பசுந்தாது பைம்பொழிலிற்
பரப்பிவரும் பருவத் தென்றல்
இ-ள்: துயர மிகுதியாலே என் கண்ணிடத்தில் விரைந்து இழிதரு நீரை மாற்றினராய் , வருந்தும் என்னுடைய இணை விழியானவை இமை பொருந்துந் தன்மைத்தாகிய உறக்கத்தை நீக்கிக் கரத்தின்கண் இனமாக இடப்பட்ட வளை சோருதல்போல , இனிய அழகு குறைந்து யான் துயருறும்
1. ' துனிவருநீர் ' என்பதும் ,
2. ' இனவளை போய் ' என்பதும்,
3. ' இகந்தவர்' என்பதும் ,
4. ' பனிமதுவும் பசுந்தாதும் ' என்பதும் பாடங்களாகும்.