வண்ணம் பிரிந்து போனவருடைய நாட்டின்கண் , பிரிந்திருந்தோர் நடுக்க மெய்தப் பெரிதாகிய பொய்கையிலுண்டாகிய தாமரையின் கட்டை விடுவிக்கும் இளவேனிலும் , அக்காலத்தி லுண்டாகிய குளிர்ந்த தேனையும் , பசிய தாதுக்களையும் பசுமையான சோலையின்கண் பரப்பி வருகின்ற இளந்தென்றலும் இல்லையோ ? சொல்லுவாயாக தோழீ ! என்றவாறு .
துனைதல் - கடுகுதல் , நீர் - கண்ணீர் , துடைத்தல் - மாற்றுதல் , துவளுதல் - வருந்துதல் , துணைவிழி - இணைவிழி , தனியவர்கள் - பிரிந்தவர்கள் , தட - பெருமை , தருண வேனில் - இளவேனில் , பனிமது - குளிர்ந்த தேன் .
இனி , பொருள் காரணமாகிய இன்பமாவது மது காரணமாக மதுகரங்கட்கு வரும் மகிழ்ச்சிபோலக் கவி கேட்போர்க்கு வரும் இன்பமாம் ; கருதிய பொருள் கேட்டார்க்கு வரும் வியப்பும் அது .
எ-டு : 'மானேர் நோக்கின் வளைக்கை யாச்சியர்
கான முல்லை சூடார் கதுப்பில்
பூவைப் புதுமலர் சூடித் தாந்தம்
அடங்காப் பணைமுலை யிழைவளர் முற்றத்துச்
சுணங்கின் செவ்வி மறைப்பினு மலர்ந்த
பூவைப் புதுமலர் பரப்புவர் பூவயின்
ஆனிரை வருத்தம் வீடமலை யெடுத்து
மாரி காத்த காளை
நீல மேனி நிகர்க்குமா லெனவே'
எனவும்,
'பொற்றொடிப் புதல்வர் ஓடி யாடவும்
முற்றிழைமகளிர் 1முகிழ்முலை திளைப்பவுஞ்
செஞ்சாந்து சிதைந்த மார்பி னொண்பூண்
அரிமா வன்ன வணங்குடைத் துப்பின்
திருமா வளவன்2 தெவ்வர்க் கோக்கிய
வேலினும் வெய்ய கானமவன்
கோலினுந் தண்ணிய தடமென் றோளே'
- பட்டினப் . 295, 301
எனவும் வரும் .
இப்பொருள் காரணமாகிய இன்பம் இரண்டு நெறியார்க்கும் ஒக்கும் . இவ்வாறு தொடுக்குங்கால் , கிராமியச் சொல்லும் பொருளும் , இடக்கர்ச் சொல்லும் பொருளும் தீண்டாமல் பாடுவது சிறப்புடைத்து .
வி-ரை: வழிமோனை - ஒவ்வொரு அடியிலும் சீர்கள் இடையிட்டு மோனைத்தொடை கொண்டு வருவது .
'முன்னைத்தம்...........எம்மூர்' - இப்பாடல் இளம்பெண்டிர் சிற்றில் இழைத்து விளையாடுங்கால் , அதனைக் கடலோதம் அழித்துச் செல்ல , அது கண்டு மனமழிந்து கூறியதாகும் . இப்பாடலில் ஒவ்வொரு அடியிலும் 1,3,5 - ஆம் சீர்களில் மோனை வந்து அமைந்து இன்பம் பயத்தலின் இது இன்பமாயிற்று .
1. 'முலைமுக டுழக்கவும்' என்பதும் ,
2. 'தெவ்வர்க் கோச்சிய' என்பதுவும் பாடங்களாகும்.