பொதுவணியியல்21

கௌடர் இங்ஙனம் 1,3,5 - ஆம் சீர்களில் இடையிட்டு மோனை வருதலை விரும்பாது சீர்தோறும் மோனையமைதலையே விரும்புவர் . சுருங்கத் தொடுப்பது - மோனைத்தொடை குறைந்து வருதல் .

'துனைவருநீர் ..... தென்றல்' - இப்பாடல் பிரிவாற்றாத தலைவி ஆற்றாமை மீதூரத் தோழிக்குச் சொல்லியதாகும் . இதில் ஒவ்வொரு அடியிலும் ஆறாவது சீர் நீங்கலாக ஏனைய ஐந்து சீர்களிலும் மோனைத் தொடை அமைந்திருத்தல் காண்க .

'மானேர் ... எனவே' - இப்பாடல் யாண்டுளதெனத் தெரிந்திலது . ஆயர் மகளிருக்குக் காயாம்பூவிலுள்ள பற்றை இப்பாடல் விவரிக்கின்றது .

இ-ள்: மானை யொத்த நோக்கினையும் , வளையணிந்த கைகளையும் உடைய ஆய்ச்சியர்கள் ; தாம் வசிக்கும் காட்டிலுள்ள முல்லைப்பூக்களைக் கூடக் கூந்தலில் சூட மாட்டார்கள் ; அதற்கு மாறாகக் காயாம்பூவையே தலையில் சூடிக்கொண்டு , தமது அடங்காத பெருத்த முலைகளையும் நல்ல அணிகளையும் உடைய மார்பாகிய முற்றத்திலுள்ள தேமல் அழகினை மறைப்ப தாயினும் அன்றலர்ந்த இக்காயாம்பூவினையே பரப்பி வைப்பர் . காரணம் , இவ்வுலகிலுள்ள பசுக்களுக்கு இந்திரன் பெய்வித்த பெருமழையினால் உண்டான துன்பம் நீங்குமாறு கோவர்த்தன கிரியைக் குடையாக எடுத்துக்காத்து அத்துன்பத்தினை நீக்கியருளிய நீலநிறம் பொருந்திய கண்ணபிரானின் திருமேனியை அக்காயாம் பூக்கள் ஒப்பதாலாகும் என்பது .

தனக்கு அணித்தாக வுள்ளதும் , கற்பிற்குரியதுமான முல்லையை விடுத்துக் கண்ணபிரானின் நிறம் போன்றிருக்கும் ஒரு காரணத்தாலேயே அக்காயாம் பூவினை விரும்புவர் என்பதால் , அவர்கட்கு அப்பெருமான் மீதுள்ள ஈடுபாடு நன்கு விளங்கும் .

'பொற்றொடிப் ...... தோளே' - இப்பாடற்பகுதி பட்டினப்பாலையின் இறுதியிலுள்ள பகுதியாகும் . இது தலைவன் பொருள்வயிற் பிரியக் கருதிய நெஞ்சிற்கு ஆற்றினது அருமை கூறி விலக்குவித்ததாகும் .

இதன் பொருள் : பொன்னாற் செய்த தொடியினையுடைய பிள்ளைகள் ஓடிவந்து ஏறி விளையாடுகையினாலும் , மெய்ம்முழுதுமணிந்த அணிகலங்களையுடைய மகளிருடைய தாமரைமுகை போலும் முலைகள் புணர்தலாலும் , சிவந்த சந்தனமழிந்த மார்பினையும் , ஒள்ளிய பேரணிகலங்களையும் , சிங்க வேற்றை யொத்த வருத்தத்தையுடைய வலியினையுமுடைய திருவின் பெருமையையுடைய கரிகாற் பெருவளத்தான் பகைவரைக் கொல்லுவதற்கு அறுதியிட்டு வைத்த வேலினும் கடியவாயிருந்தன காடு ; அவன் செங்கோலினும் குளிர்ந்திருந்தன பெரிய தோள்கள் என்பதாம் .

இவ்விரு பாடல்களும் பொருள்காரணமாக இன்பம் விளைவித்தல் காண்க .