5. ஒழிகிசை
20. ஒழிகிசை யென்பது வெறுத்திசை யின்மை .
எ-ன் ஒழிகிசை யென்று சொல்லப்படுவது வெறுக்கத்தகும் இன்னா இசையின்றி வரத்தொடுப்பது எ-று .
எ-டு : 'இமையவர்கண் 1மோலி யிணைமலர்த்தாள் சூடச்
சமையந் தொறுநின்ற தையல் - சிமைய
மலைமடந்தை வாச மலர்மடந்தை யெண்ணெண்
கலைமடந்தை நாவலோர் கண்'
இ-ள்: துணையாகிய மலர்போன்ற சீர்பாதத்தைத் தேவர்கள் எல்லாரும் தங்கள் முடிமேலே சூடும் வண்ணம் பலவகைப்பட்ட சமயங்கள் தோறும் புக்குநின்ற மடவாள் , சிகரங்களையுடைய மலையரையன் மகளுமாய் , நறுநாற்றத்தை யுடைத்தாகிய தாமரைமலர் மீதிருந்த சீதேவியுமாய்ப் பலவகைப்பட்ட கலைகளுக்கு இறைவியுமாய் நின்ற சரசுவதி ; அவள் நாவினால் வலியோர்க்குக் கண்ணாயிருப்பவள் என்றவாறு .
மோலி - தலை , சிமையம் - மலையுச்சி , வாசம் - நாற்றம் , மலர் மடந்தை - சீதேவி, மலைமடந்தை - பார்வதி .
இனி , 'இன்னா இசை' என்பது மென்னடை யொழுக்கத்து வல்லொற்றடுத்து மிக்கது போலவும் , அந்நடை யொழுக்கத்து உயிரெழுத்தடுத்துப் பொய்ந்நலம்பட்டு அறுத்திசைப்பது போலவும் வரும் .
எ-டு : 'ஆக்கம் புகழ்பெற்ற தாவி யிவள்பெற்றாள்
பூக்கட் குழற்கார் பொறைபெற்ற - மாக்கடல்சூழ்
மண்பெற்ற வொற்றைக் குடையாய் வரப்பெற்றெங்
கண்பெற்ற வின்று களி '
இ-ள்: பெரிய கடல் சூழ்ந்த உலகத்துள்ளார் தங்கள் தவப்பலனாகப் பெற்ற ஒப்பற்ற குடையையுடைய தலைவனே ! நீ எங்களை நினைத்து வந்த இதனானே , இன்று , நின்னுடைய புகழானது பெருக்கம் பெற்றது ; தலை மகளாகிய இவள் உயிர்பெற்றாள் ; இவளுடைய கார் போன்ற குழலானது மதுவினை யுடைத்தாகிய பூக்களின் பாரத்தைப் பெற்றது ; எங்களுடைய கண்களும் செருக்குப் பெற்றன என்றவாறு .
ஆக்கம் - பெருக்கம் . ஆவி - உயிர் . கள் - தேன் . 'சூழற்கார்' என்றது கார்போன்ற குழல் என்றவாறு . பொறை - பாரம் . களி - செருக்கு .
இவ்வாறு வேண்டார் இரண்டு நெறியாரும் :
வி-ரை: மெல்லெழுத்துக்களால் இயன்ற யாப்பமைதியினிடையில் வல்லெழுத்துக்கள் வரினும் , வல்லெழுத்துக்களான் இயன்ற யாப்பமைதியினிடையில் உயிரெழுத்துக்கள் வரினும் செவிக்கு இன்னாத இசையையே உண்டாக்கும் .
1. 'மௌலி' என்பதும் பாடம் .