'இமையவர்கண்' என்ற பாடல் நாமகளுக்கு வணக்கம் சொல்வதாகும் . இதன் ஓசை வெறுக்கத்தக்கதாயின்றி இனிய ஓசையாயிருத்தலின் இது ஒழுகிசையாயிற்று .
'ஆக்கம் புகழ் பெற்றது' என்ற பாடல் , தலைவன் வரவு கண்டு மகிழ்ந்த தோழி , அவனுக்கு உரைத்ததாகும் . 'பூக்கட் குழற்கார்' என்ற விடத்து வெறுக்கத்தக்க ஓசை யிருத்தலின் இப்பாடலை இரண்டு நெறியாரும் வேண்டாராயிற்று .
6. உதாரம்
21. உதார மென்பது ஓதிய செய்யுளிற்
குறிப்பின் ஒருபொருள் நெறிப்படத் தோன்றல் .
எ-ன் உதாரம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று .
இ-ள்:உதாரமென்று சொல்லப்படுவது , சொல்லப்பட்ட செய்யுளுள் சொற்படு பொருளின்றி அதன் குறிப்பினால் ஒரு பொருள் நெறிப்படத் தோன்றுவது என்றவாறு .
எ-டு : 'செருமான வேற்சென்னி தென்னுறந்தை யார்தம்
பெருமான் முகம்பார்த்த பின்னர் - ஒருநாளும்
பூதலத்தோர் தம்மைப் பொருணசையாற் பாராவாம்
காதலித்துத் தாழ்ந்திரப்போர் கண் '
இ-ள்: பொருள்மேல் வைத்த அவாவினாலே தாழ்வு வைத்திரப்போர் கண்களானவை , போரின்கண் வலியுடைத்தாகிய வேலையும் , சென்னியென்னும் பெயரையும் உடையவனாகிய தெற்கின்கணுண்டாகிய உறந்தைப் பதியார்க்குத் தலைவனாகிய சோழனுடைய முகத்தைப் பார்த்த பின் , பூமண்டலத்துள்ளார் முகங்களைப் பொருள் விருப்பினாற் பாரா என்றவாறு .
மானம் - வலி . உறந்தை - உறையூர் . சென்னி - சோழன் . ஆம் என்பது அசைநிலை .
இதனுள் , 'உறந்தையார் கோமானை ஒருநாள் முகம் பார்த்த இரவலர் பின்னைப் பிறரைப் பொருள் நசையாற் பாரார்' எனவே , அவன் இரப்போர் வறுமை தீரக் கொடுப்பான் என்னும் பொருள் குறிப்பினாற் கொள்ளக் கிடந்தவாறு காண்க .
'அவிழ்ந்த துணியிசைக்கும் அம்பலமுஞ் சீக்கும்
மகிழ்ந்திடுவார் முன்னர் மலரும் - கவிழ்ந்து
நிழறுழாம் யானை 1நெடுந்தேர் இரவி
கழறொழா மன்னவர்தங் கை'
என்பதும் இது .
இ-ள்: தன்னுடைய நிழலைக் கவிழ்ந்து சிதைக்கும் யானையினையும் நெடிய தேரினையு முடைய இரவி குலத்துள்ளானுடைய பாதங்களைப் பணியாத அரசர்களுடைய கைகளானவை , உடுக்க வேண்டின் முடிந்த துணிகளை யுடைத்தாகிய உடையின் அவிழ்ந்த துணிகளைப் பின்பு முடியா
1. 'நெடுமான்தேர்க் கிள்ளி' என்பதும் பாடம் .