24தண்டியலங்காரம்

'இடுவார் முன்னர் உவந்து விரியும்' என்றதனால் , இடாதார் முன்னர் உவகையின்றி விரியும் எனக் கொள்க .

இசைத்தல் - முடிதல் . சீத்தல் - துடைத்தல் . மலர்தல் - விரிதல் . கவிழ்தல் - இறங்குதல் . துழாவுதல் - சிதைத்தல் . 'நிழல் துழாவும் யானை' யென்பது 'நிழறுழாம் யானை' என விகாரமாயிற்று .

இஃது இரண்டு நெறியார்க்கும் ஒக்கும் .

வி-ரை: உதாரம் - பாடலிலுள்ள வெளிப்படையான பொருளேயன்றிக் குறிப்பாகச் சிறப்பானதொரு பொருள் தோன்றப் பாடப்படுவதாகும் .

இவ்விரு பாடல்களிலும் ஒவ்வொரு குறிப்புப் பொருள் இருத்தலின் உதாரமாயிற்று . குறிப்புப்பொருள் படுதலில் முன்னைய பாடலே சிறப்புடைத்து .

21

7. உய்த்தலில் பொருண்மை

22. கருதிய பொருளைத் தெரிவுற விரித்தற்(கு)
உரியசொல் லுடைய(து) உய்த்தலில் பொருண்மை .

எ-ன் உய்த்தலில் பொருண்மை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று .

இ-ள்: உய்த்தலில் பொருண்மை என்பது கவி தன்னாற் கருதப்பட்ட பொருளை விரிக்குஞ் சொல்லைச் செய்யுளுள்ளே யுடைத்தாய்ப் பிறிது மொழி கூட்டி யுரைக்கும் பெற்றியின்றி வரத் தொடுப்பது எ-று .

எ-டு : 'இன்றுமையாள் மாசிலா வாண்முகங்கண் டேக்கற்றோ
அன்றி விடவரவை யஞ்சியோ - கொன்றை
உளராவா றோடு மொளிர்சடையீர் சென்னி
வளராவா றென்னோ மதி'

இ-ள்: உமையாளுடைய குற்றமற்ற ஒளியினையுடைத்தாகிய முகமண்டலத்தைக் கண்டு அதனுடைய நலனை ஆசைப்படுதலானோ ? அஃதன்றியே , நீர் ஆபரணமாக அணிந்த விடத்தை யுடைத்தாகிய பாம்பினைக் கண்டு அஞ்சுதலானோ ? கொன்றையின் மலர்களை யீர்த்துக் கொண்டு கங்கையாறு விரைந்து திரியும் ஒளியோடு கூடிய சடையினை யுடையீர் ! இன்று உம்முடைய திருமுடிமேல் உண்டாகிய பிறையானது வளராதிருந்த காரணம் யாது ? சொல்லுவீராக என்றவாறு .

'கொன்றை' என்றது ஆகுபெயராற் பூவை எனக் கொள்க . உளர்தல் - கலக்குதல் . சென்னி - சென்னியிலே என விரிக்க . 'வளரா ஆறு ' என்றது வளராத தன்மை எனக் கொள்க . மதி - பிறை .

இனி உய்த்துணர்தல் வருமாறு : -

எ-டு : 'இன்றுமையாள் மாசிலா வாண்முகங்கண் டேக்கறுமால்
அன்றி விடவரவு மங்குறையுங் - கொன்றை
உளவாரா றோடு மொளிர்சடையீர் சென்னி
வளராவா றென்னோ மதி '