என்பதனுள் 'யாதனாலோ' என்னுஞ் சொற்கூட்டி யுரைக்கப்படும் .
இவ்வாறு வேண்டுவர் இரண்டு நெறியாரும் .
வி-ரை: இவ்விரு பாடல்களுள் , முன்னைய பாடலில் கருதிய பொருளை விளக்குதற்குப் பிறசொற்கள் எவையும் தேவையில்லா திருத்தலின் அது உய்த்தலில் பொருண்மையாயிற்று . உய்த்துணர்தற்குக் காட்டப்பட்ட பாடல் அத்துணைச் சிறப்புடைத்தன்று .
8. காந்தம்
23. உலகொழுக் கிறவா(து) உயர்புகழ் காந்தம்.
எ-ன் காந்தம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று .
(இ-ள்) காந்தம் என்பது ஒன்றனை உயர்த்துப் புகழுங்கால் உலக நடை யிறவாமல் உயர்த்துப் புகழ்வது என்றவாறு .
எ-டு : 'ஒருபே ருணர்வுடனே யொண்ணிறையுந் தேய
வருமே துறவென்பால் வைத்த - ஒருபேதை
போதளவு வாசப் புரிகுழல்சூழ் வாண்முகத்துக்
காதளவு நீண்டுலவுங் கண் '
(இ-ள்) யான் வருத்தத்தையுறும் வகையாகப் பேதைத் தன்மையை யுடையாள் ஒருத்தி என் உள்ளத்திடத்து வைத்த , பூவொடு கலந்த நறுநாற்றத்தை யுடைத்தாகிய சுருண்ட குழலினையுடைத்தாய் ஒளியோடுங்கூடிய முகத்தின்கண் உண்டாகிய காதின் எல்லை யளவுஞ் சென்று மீண்டு திரியுங் கண்களானவை , இக்காலத்து எனது ஒரு தன்மையாய் இருக்கப் பட்ட அறிவுடனே ஒள்ளிதாகிய ஒழுக்கமுங் கெட வந்து தோன்றாநின்றன எவ்வாறு .
வாள் - ஒளி , ஒரு பேதை என் உள்ளத்து வைத்த கண் எனக் கூட்டுக . 'தேய' என்பது கெட என்பதாம் . 'ஏதம்' என்பது ஏதென நின்று வருத்த மாயிற்று . 'என்பால் வைத்த' என்றது என் உள்ளத்து வைத்த என்றவாறு .
இனிக் கௌடநெறி வருமாறு :
எ-டு : 'ஐயோ வகலல்குல் சூழ்வருதற் காழித்தேர்
வெய்யோற் கநேகநாள் வேண்டுமால் - கைபரந்து
வண்டிசைக்குங் கூந்தன் மதர்விழிகள் சென்றுலவ
எண்டிசைக்கும் போதா திடம் '
எனவும் .
(இ-ள்) திரளாகப் பரந்து வண்டுகள் பாடப்பெற்ற கூந்தலினை யுடையாளுடைய அகன்ற அல்குற் பரப்பைச் சூழ்வருதற்கு , ஐயோ ! ஆகாயப் பரப்பெல்லாம் ஒரு பொழுதிற் கடக்கும் ஒரு கால் தேரையுடைய பகலோனுக்கும் பன்னெடுநாள் வேண்டுவதாயிருந்தது ; அதுவேயன்றி , இவளுடைய களிப்பையுடைத்தாகிய கண்கள் சென்று மீண்டு உலாவுவதற்கு எண்வகைப்பட்ட திக்குகளில் உண்டாகிய இடப்பரப்பும் போதாததாய் இருந்தது ; இஃது ஓர் உருவத்தன்மை யிருந்தபடியென் ! எ-று .
'ஐயோ' என்பது இரக்கத்தின்கட் குறிப்பு ; இவ்விரக்கம் ஆதித்தன் மேல் ஏற்றுக .