(3) ஈற்றயலடி யொழித்து ஏனை மூன்றடியும் முதன்மடக்கு
எ - டு : | 'மலையு மலையு மகிழ்ந்துறையும் வேயும் |
| கலையுங் கலையுங் கடவும் - தொலைவில் |
| அமரி யெமக்கரணாம் என்னுமவர் முன்னிற் |
| குமரி குமரிமேற் கொண்டு' |
இ - ள் : பொருப்பின்கண்ணும் கடலின்கண்ணும் மகிழ்ந்து உறைபவளும் இளம்பிறையைச் சூடுபவளும், கலையேற்றை உகைப்பவளும், தொலைவில்லாத அமரினை உடையளுமாகிய குமரியாள், எமக்குக் காவலாம் என்பார்க்கு முன்னே சிங்கத்தை உகைத்துத் தோன்றுவள் எ -று.
இதில் 'மலையு மலையும்' என முதலடி முதலிலும், 'கலையுங் கலையும்' என இரண்டாமடி முதலிலும், 'குமரி குமரி' என நான்காமடி முதலிலும், மடக்குகள் வந்தமை காண்க.
(வி - ரை): இது வெற்றித் திருவின் (துர்க்கை) இயல்பை விவரிப்பதாகும். மலையும் அலையும் எனப் பிரிக்க. அலை - கடல். கலை - பிறை. கலை - மான். முன்னிற்கும் அரி - முன்னே இருக்கும் சிங்கம். குமரி - வெற்றித்திரு. குமரி முன்னிற்கும் அரிமேற் கொண்டு எனக் கூட்டுக.
(4) முதலடி யொழித்து ஏனை மூன்றடியும் முதன்மடக்கு
எ - டு : | 'பாலையாழ் தன்னிற் பதிற்றிரட்டி வெய்தன்றே |
| மாலைவாய் மாலைவாய் இன்னிசை - மேலுரை |
| மேவலர் மேவலர் மெல்லாவி வாட்டாதோ |
| காவலர் காவலராங் கால்' |
இ - ள்: பாலையாழ் தன்னிலும் இருபது மடங்கு வெம்மையையுடையதன்றோ! அந்திப் பொழுதின்கண் விறலி பாட்டின்கண் உண்டாகிய இன்பத்தையுடைய இசை மேலாயுள்ள புகழ்ச்சியைப் பொருந்தாதார் விரும்பிக் கூறும் அலர்; அஃது எங்களுடைய மெல்லிய உயிரை வாட்டாதொழியுமோ? தலைவர் நம்மைக்காவாரான காலத்து எ- று.
இதில் 'மாலைவாய் மாலைவாய்' என்று இரண்டாமடி முதலிலும், 'மேவலர் மேவலர்' என மூன்றாமடி முதலிலும், 'காவலர் காவலர்' என நான்காமடி முதலிலும் மடக்குகள் வருதல் காண்க.
இவை நான்கும் மூவடி முதன்மடக்கு.
(வி - ரை) இது, தோழி அலர் மிகுதி கூறியது. மாலைவாய்- மாலைப் பொழுதின்கண். மாலை - விறலி. வாய் இன்னிசை - வாய்ப்பாட்டு. மேவலர் - பகைவர். மேவு அலர் - விரும்பிக்கூறும் அலர். காவலர் - தலைவர். கா அலர் - காப்பார் அல்லர்.
4. முற்றுமடக்கு
முதல் முற்றுமடக்கு
எ - டு : | 'வரைய வரைய சுரஞ்சென்றார் மாற்றம் |
| புரைய புரையவெனப் பொன்னே! - உரையல் |
| நனைய நனைய தொடைநம்மை வேய்வர் |
| வினையர் வினையர் விரைந்து' |