சோழன் சீறியவூர் மான் பயிலும் காடாகவும், மருதம், மூங்கில் செறியும் குறிஞ்சியாகவும் மாறும் என்பதாம். இதில் 'படியவாம்' என்ற சொல், நான்கடிகளின் இடையிலும் மடங்கி வந்தமை யுணர்க. (வி - ரை) முதலடி : படி - உலகம்; ஈண்டு உயர்ந்தோர் மேற்று. அவாம் - விரும்பும். இரண்டாம் அடி: படிய - உலகிலுள்ள; ஈண்டு அதன் கண் உள்ள ஊர்களைக் குறித்தன. வாம் - தாவி. பரி - செலவு. மூன்றாம் அடி: படியவாம் - தன்மையவாம். நான்காம்அடி: படிய - (யானைகள்) படிந்து கலக்குதலால். ஆம் - உண்டாகின்ற.(3) இடையிட்டு வந்த இறுதி முற்றுமடக்கு எ - டு : | 'சொன்ன நாளிது சுரும்பிமிர் இதழிபொன் கால | | மின்னு வாள்விட வில்வளைத் தூன்றிய கால | | இன்ன கார்முகில் இனமிருண் டெழுதரு கால | | மன்னர் வாரலர் தான்வரு மயில்மருங் கால' |
இ - ள் : தாம் வருதுமென்று சொன்னநாள் இதுவாயிருந்தது; வண்டுகள் பாடாநின்ற கொன்றைகள் எல்லாம் பொன்பொழிய, மின்னானது ஒளியை யுமிழ, இந்திரதனுவை வளைத்து வீழ்த்திய மழைத்துளிகளை யுடைத்தாய் இப்படி வந்த கார்காலப் பருவ முகில் இனமாய் இருண்டெழுதரும் பொழுதும் தலைவர் வந்திலர்; பக்கமெல்லாம் மயில்கள் ஆடப், பருவந்தான் வாராநின்றது எ - று. இதில் 'கால' என்னும் சொல் நான்கடிகளின் ஈற்றிலும் மடங்கி வருதல் காண்க. இவை மூன்றும் இடையிட்டு வந்தன. (வி - ரை) இது, பருவ வரவு கண்டு ஆற்றாளாய தலைவி கூறியதாகும். முதலடி: பொன்கால - பொன்னைப் பொழிய. இரண்டாம் அடி: ஊன்றிய கால - வீழ்த்தப்பட்ட மழைத்துளி. கால் - நீர்த்தாரை. மூன்றாம் அடி: எழுதரும் காலம் - (மேகம்) எழுதரும் பொழுது. நான்காம் அடி: மயில் மருங்கு ஆல - மயில்கள் பக்கத்தே ஆட. இனி, இடையிட்டும் இடையிடாதும் வருவன வருமாறு: - இடையிட்டும் இடையிடாதும் வந்த இடையும் இறுதியும் முற்றுமடக்கு எ - டு : | 'வாமான மான மழைபோல்மத மான மான | | நாமான மான கமுற்றாழக மான மான | | தீமான மான வர்புகாத்திற மான மான | | காமான மான கல்சுரங்கனன் மான மான' |
இ - ள் : வா மான் அ - தாவும் மான்களை யுடையன, மானம் மழைபோல் - பெரிய மேகம் போன்று, மதம் ஆன மான - மதம் அமைந்த யானைகளையுடையன, நாம் ஆன - அச்சமான, மால் நகம் உற்று - புலியுகிர் உறுதலால், ஆழ் அகம் - தாழ்ந்த மனத்தையுடைய, மானம் ஆன - விலங்குகளை யுடையன, தீம் ஆன - தீமையை யுடையன, மானவர் புகா - மக்கள் ஊடாடாத, திறம் ஆன மான- திறமான தன்மையை யுடையன, கா மான - சோலைகளை யொப்ப, மானம் கல் - வலிய கற்களை யுடையன,
|