(இ-ள்) புனிதமான காவிரி சூழ்ந்த திருவரங்கம் என்னும் இடத்திற்குத் தலைவனும் , குதிரையை நன்கு செலுத்தித் தேர் ஊர்தற்கு இசைந்தருள்பவனுமான திருமாலின் கால்கள் , மாவலியினிடமாக மூன்றடி மண்வேண்டி உலகம் ஏழினையும் தாவி யளந்ததும் , அருளுணர்ச்சி யுடையவர்கள் இன்புறுமாறு கங்கையை ஈன்றதுவும் , நன்மைகள் அனைத்திற்கும் இருப்பிடமாகிய பரதன் நந்திக் கிராமத்தில் பதினான்கு ஆண்டுகள் வரை கண்டு இன்புறுமாறு வைகியதுவும் , தந்தையின் ஏவவால் பதினான்கு ஆண்டுகள் காட்டிற்குச் சென்று வந்ததுவும் , அமிழ்தத்தை யுண்பவரான தேவர்கள் எப்பொழுதும் நினைந்து வணங்குதற்குரியதுவும் , உபமந்நிய முனிவரின் மனைவி வயிற்றிலிருந்து சாபத்தால் பிறந்த கரிக்கட்டையை அச்சாபம் நீங்கப் பிள்ளையாய் உருக்கொள்ளுமாறு செய்ததுவும் , கணவனின் சாபத்தால் கல்லாய்க் கிடந்த அகலிகையைச் சாபம் நீங்கப் பெண்ணாய் உருக்கொளச் செய்ததுவும் , செந்தமிழை நன்கு கற்றுத் தேர்ந்த திருமழிசை யாழ்வாரின் பொருட்டுக் காஞ்சியை விட்டு அகன்றதுவும் ஆன சிறப்பினையுடையன் என்றவாறு .
'மூதுணர்வோர் இன்புறக் கங்கா நதியை ஈன்றது ' என்றது பிரமன் , திருமாலின் திருவடிகளை நீராட்டி வழிபட , அந்நீரே கங்கையாயிற்று என்னும் கதையை உட்கொண்டதாகும் .
'வெந்த கரியதனை மீட்டு மகவாக்கியது' என்றது உபமந்நிய முனிவரின் மனைவிக்குப் பிறந்த மகவு சாபத்தால் கரிக்கட்டையாகப் பிறக்கப் பின்பு அது திருமாலின் திருவடிபட மகவாயிற்று என்னும் கதையை உட்கொண்டதாகும் .
'செந்தமிழ்தேர் நாவலன் பின் போந்தது ' என்றது , காஞ்சியில் திருவெஃகாவில் பணிசெய்து கொண்டிருந்த ஒரு கிழவிக்குத் திருமழிசை ஆழ்வார் இளமைப் பருவம் வரச்செய்தனர் என்று கேட்ட அரசன் , தனக்கும் இளமைப் பருவம் வருமாறு செய்தருளத் தனது அலுவலாளரான கணிகண்ணன் மூலம் திருமழிசை ஆழ்வாரை வேண்ட, அதற்கு அவர் உடன்படாராக , அரசன் கணிகண்ணனையும் ஆழ்வாரையும் நாடு கடக்குமாறு ஆணைபிறப்பிக்க , அதுபொழுது ஆழ்வார் ,
'கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டா - துணிவுடைய
செந்நாப் புலவன்யான் செல்கின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள் '
எனக் கூறிச் செல்லப் பெருமாளும் அங்ஙனமே சென்றார் என்பதை உட்கொண்டதாகும் .
இவ்விரு பாடல்களும் சேர்ந்து ஒரு கருத்தை நிறைவு செய்தலின் குளகமாயிற்று .
தொகைநிலைச் செய்யுள்
5. தொகைநிலைச் செய்யுள் தோன்றக் கூறின்
ஒருவர் உரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும்
பொருளிடங் காலந் தொழிலென நான்கினும்
பாட்டினும் அளவினுங் கூட்டிய வாகும் .