பொதுவணியியல்5


எ-ன் தொகைநிலைச் செய்யுளாமாறு உணர்த்துதல் நுதலிற்று .

(இ-ள்) தொகைநிலைச் செய்யுளென்பதனை விளங்கச்சொல்லின் , ஒருவரால் உரைக்கப்பட்டுப் பல பாட்டாய் வருவனவும் , பலரால் உரைக்கப் பட்டுப் பல பாட்டாய் வருவனவுமாம் . அவை பொருளாற் றொகுத்த பெயர் பெற்றனவும் , இடத்தாற் றொகுத்த பெயர் பெற்றனவும் , காலத்தாற் றொகுத்த பெயர் பெற்றனவும் , தொழிலாற் றொகுத்த பெயர் பெற்றனவும் , பாட்டாற் றொகுத்த பெயர் பெற்றனவும் , அளவாற் றொகுத்த பெயர் பெற்றனவுமாம் என்றவாறு .

அவற்றுள் ஒருவரால் உரைக்கப்பட்டது - திருவள்ளுவப் பயன் பலரால் உரைக்கப்பட்டது - நெடுந்தொகை . இஃது எல்லாத் தொகைகளுக்கும் பொதுவிலக்கணம் . பொருளால் தொகுத்தது - புறநானூறு. இடத்தால் தொகுத்தது - களவழி நாற்பது . காலத்தால் தொகுத்தது - கார்நாற்பது . தொழிலால் தொகுத்தது - ஐந்திணை . பாட்டால் தொகுத்தது - கலித்தொகை . அளவால் தொகுத்தது - குறுந்தொகை . இவை சிறப்பிலக்கணம் .

'கூட்டிய' என்ற விதப்பான் , இவ்வறு வகையானும் அன்றிப் பிறவற்றால் பெயர்பெற்று வருவனவும் உளவேல் அவையுங் கொள்க .

வி-ரை: திருவள்ளுவப் பயன் - திருக்குறள் . நெடுந்தொகை - அகநானூறு . களவழி நாற்பது - போர்க்களத்தின் சிறப்பினை நாற்பது பாடல்களால் வருணித்துக் கூறும் நூல் . ஐந்திணை - குறிஞ்சி , பாலை , முல்லை , மருதம் , நெய்தல் என்ற ஐந்து திணைகளுக்கும் உரிய புணர்தல் , பிரிதல் , இருத்தல் , ஊடல் , இரங்கல் என்னும் ஐந்து ஒழுக்கங்களையும் விரித்துக் கூறும் நூல் . ஐந்திணை யைம்பது , ஐந்திணை யெழுபது , திணைமொழி யைம்பது , திணைமாலை நூற்றைம்பது முதலிய நூல்கள் இதன்கண் அடங்கும் . அகப்பொருள் நுவலும் நூல்களில் 4 முதல் 8 அடி வரையிலுள்ள பாக்களின் தொகுப்பைக் குறுந்தொகை என்பர் . அகநானூற்றில் 13 முதல் 37 வரையுள்ள அடிகளால் இயன்ற பாக்கள் உளவாதல் நோக்கி அதனை நெடுந்தொகை என்றனர் .

தொடர்நிலைச் செய்யுள்

6. பொருளினுஞ் சொல்லினும் இருவகை தொடர்நிலை

எ-ன் தொடர்நிலைச் செய்யுளாமாறு உணர்த்துதல் நுதலிற்று .

(இ-ள்) பொருளினால் தொடர்தலும் , சொல்லினால் தொடர்தலுமென இருவகைப்படும் தொடர்நிலைச் செய்யுள் எ-று.

எனவே , பொருள்தொடர்நிலைச் செய்யுளும் , சொற்றொடர்நிலைச் செய்யுளும் என இருவகைப்படும் .

'இரண்டு' என்னாது 'வகை' என்ற மிகையான் , மூன்றாவது பொருளினாலுஞ் சொல்லினாலும் தொடர்தலும் உண்டெனக் கொள்க .