6தண்டியலங்காரம்

வி-ரை: முற்செய்யுளோடு பிற்செய்யுளுக்குத் தொடர்பு யாது மின்றித் தனித்தனியே ஒரு பொருளுணர்த்தும் செய்யுட்கள் பல விரவித் தொகுக்கப்பட்ட நூலுக்குத் தொகைநிலைச் செய்யுள் என்றும் , முற்செய்யுளோடு பிற்செய்யுளுக்குச் சொல்லினாலோ , அன்றிப் பொருளினாலே தொடர்புடைய நூலுக்குத் தொடர்நிலைச் செய்யுள் என்றும் பெயர் கூறப்படும் . பொருள் தொடர்நிலைச் செய்யுளுக்குப் பெரிய புராணம் , கம்பராமாயணம் முதலியனவும் , சொல்தொடர்நிலைச் செய்யுளுக்குத் திருச்சதகம் , அந்தாதி , கலம்பகம் முதலியனவும் எடுத்துக்காட்டாம் . திருவாசகத்திலுள்ள திருச்சதகத்திற்குச் சொல்லினாலன்றிப் பொருளினாலும் ஒன்றற்கொன்று தொடர்பு உளதாதலைச் சான்றோர் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளனர் . இதனை நோக்குழி இந்நூல் சொற்பொருள் தொடர்நிலைச் செய்யுளுக்கும் எடுத்துக் காட்டாமாறு உணரலாம் .

அதன் வகை

7. பெருங்காப் பியமே காப்பிய மென்றாங்(கு)
இரண்டாய் இயலும் பொருள்தொடர் நிலையே.

எ-ன் அவற்றுள் பொருள் தொடர்நிலைச் செய்யுளைப் பகுத்து உணர்த்துதல் நுதலிற்று .

(இ-ள்) பெருங்காப்பியம் காப்பியம் என இரண்டு வகையாய் நடக்கும் , பொருள் தொடர்நிலைச் செய்யுள் எ-று .

'பெருங்காப்பியம்' என்று ஆசிரியர் அடைசொற் புணர்ந்தமையின் , காப்பியம் என்பது சிறிதெனப் பெறப்பட்டது . இஃது உய்த்துக் கொண்டுணர்தல் . இதனைச் சிறுகாப்பியம் எனினும் இழுக்காது . அல்லதூஉம் 'எடுத்த மொழிஇனஞ் செப்பலு முரித்தே' (தொல் - சொல் - 60) எனக் கொள்க , என்றார்க்குச் செப்பாமையும் உரித்தென்று கொள்ளாமோ வெனின் , ஒன்றே இனமாயக்காற் கோடலும் , பல இனமாயக்காற் கொள்ளாமையுமாம் . ஆதலான் , ஆண்டே கூறினாரென்பது .

அஃதேல் 'இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை, வழக்காறல்ல செய்யு ளாறே' (தொல் - சொல் - 18) என்ற தென்னாமோ வெனின் , அவை செய்யுட்கே யுடைய சில சொல்லுதல் வகை ; இஃது அன்னதன் றென்பது .

அஃதேல் கவியாற் பாடப்படுவனவெல்லாம் காப்பியமன்றோ ? பொருள் தொடர்நிலையைக் காப்பியமென்றது என்னை ? எனின் , சேற்றுள் தோன்றுவன வெல்லாம் பங்கயமெனப் பெயர் பெறுமாயினும் , அப்பெயர் தாமரை யொன்றன்மேற்றே ஆயினவாறுபோல இப்பெயர் பொருள் தொடர்நிலைக்கே ஆயிற்று . ஒழிந்தனவும் ஒழிந்த தமக்கேற்ற பெயர் பெற்றன எனக் கொள்க .

'இரண்டு' என்னாது 'இயலும்' என்ற மிகையால் பத்து வகைப்பட்ட நாடக சாதியும் , கோவையும் பொருள் தொடர்நிலைப்பாற் படுமெனக் கொள்க .

பத்து வகைப்பட்ட நாடக சாதியாவன : - நாடகம் , பிரகரணம் , பாணம் , பிரகசனம் , டிமம் , வியாயோகம் , சமவாகாரம் , வீதி , அங்கம் ,