1ஹீயா மிருகம் என இவை . கோவை என்பன தமிழ் முத்தரையர் கோவை முதலாயின .
அல்லதூஉம் , அவ்விலேசானே முற்கூறிய முத்தகம் முதல் மூன்றும் , பின்னர்க்கூறிய பொருள்தொடர்நிலைச்செய்யுட்கு உறுப்பாய் வருதலுமுடையவெனக் கொள்க .
வி-ரை: தொடர்நிலைச் செய்யுட்களுக்குக் காப்பியம் எனப் பெயர் கூறுதல்பற்றி நச்சினார்க்கினியர் , அடியார்க்கு நல்லார் ஆகிய உரையாசிரியர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது . அவை வருமாறு : -
நச்சினார்க்கினியர் : முந்து நூல்களிற் காப்பியம் என்னும் வடமொழியால் தொடர்நிலைச்செய்யுட்குப் பெயரின்மையும் , இதற்குப் பின்பு கூறிய நூல்கள் இதற்கு விதியன்மையும் உணர்க . (சிந்தாமணி - உரை)
அடியார்க்கு நல்லார் : முந்து நூல்களிற் காப்பியம் என்னும் வடமொழிப் பெயர் இன்றேனும் ஆசிரியர் , 'வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ , எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே' (தொல் - சொல் - 401) என்றார் ; 'ஆகும்மே' என்ற இலேசினான் உய்த்துணரற்பாலதனை , மாணாக்கன் ஐயந்தீர்தற்கன்றே பின்னும் 'சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்' (சொல் - 402) என்றார் எனக் கொள்க ; அன்றியும் பெரியதனைப் பெருங்காப்பியம் என்றே கூறி மறுக்க வேண்டுதலானும் , சான்றோர் செய்யுட்களிலும் 'கூத்தியர் இருக்கையும் சுற்றியதாகக் , காப்பியவாசனை கலந்தவை சொல்லி' (பெருங் : 4. 3 : 41 - 2) என......... உதயணன் கதையுள்ளும் , 'கருதுவ தங்கொன் றுண்டோ காப்பியக் கவிகள் காம , எரியெழ விகற்பித் திட்டார்' (1585) எனச் சிந்தாமணியுள்ளும் , 'நாடகக் காப்பியம் நன்னூல் நுனிப்போர் ' (19 : 80) என மணிமேகலை யுள்ளும் , பிறவற்றுள்ளும் கூறினமையானும் , சொற்றொடர்நிலை பொருட்டொடர்நிலை என்னும் தொடர்நிலைச் செய்யுட்கும் காப்பியம் என்று பெயர் கூறுதலும் ஆசிரியர் கருத்தென உணர்க , (சிலம்பு - உரைப்பாயிரம்)
அடியார்க்கு நல்லார் காட்டும் மேற்கோள் பகுதிகள் , வடமொழிக் காப்பியங்களையே குறித்தலானும் , தொல்காப்பியத்தில் காப்பிய இலக்கணமோ , சங்க இலக்கியங்களில் காப்பியம் என்ற பெயரால் நூல்களோ காணப்படாமையானும் நச்சினார்க்கினியர் கூறும் கருத்தே வலியுடைத்தாம் .
பெருங்காப்பியம் , காப்பியம் என்ற இரு சொற்களுள் முன்னையது அடைமொழியுடனும் பின்னையது அடைமொழியின்றியும் கூறப்பட்டுள்ளது . எனினும் முன்னையதைப் பெருங்காப்பியம் என்ற அடைமொழியுடன் கூறியிருப்பதால் , பின்னையது சிறு காப்பியம் என அறியப்படும் என்கின்றார் உரையாசிரியர் . அதற்கு அவர் கூறும் காரணம் இரண்டு (1) உய்த்துக் கொண்டுணர்தல் என்பது : - ஒன்றனைக் கூறியவழி அதனாலேயே பிறிதொன்றையும் உளதாக நுனித்தறிவதாம் . பெருங்காப்பியம் , காப்பியம் என்ற இருசொற்களில் முன்னையதைப் பெரிய என அடைமொழி கொடுத்துக் கூறியதனால் , அடுத்துள்ள காப்பியம் சிறிது என உணர்தலின் இது உய்த்துணர்வதாம் . (2) எடுத்தமொழி இனம் செப்பலும் உரித்தே என்பது : - இனமாகிய பொருட்கண் ஒன்றனை எடுத்துக் கூறியவழி அச்
1. 'ஈஹா மிருகம்' என்பதும் பாடம் .