சொல், தன் பொருட்கு இனமாகிய பொருளைக் குறிப்பால் உணர்த்துதலும் உரித்து என்பது இதன் பொருளாகும். பெருங்காப்பியம் காப்பியம் என்ற இனப்பொருள்கள் இரண்டனுள் , ஒன்றைப் பெருங்காப்பியம் என எடுத்துக் கூறவே , அச்சொல் தனக்கினமாய காப்பியத்தைச் சிறு காப்பியம் எனக் குறிப்பால் உணர்த்தியது என்பது கருத்து.
இவ்விரு காரணங்களுள் முதற்காரணத்தை ஏற்றுக்கொண்டவர்கள் , இரண்டாவது காரணத்தில் ஒரு தடையை எழுப்ப அதற்கும் விடை தருகின்றார் உரையாசிரியர் . தடை:- 'எடுத்த மொழி இனம் செப்பலும் உரித்தே ' என்னும் நூற்பாவில் உள்ள உம்மையை எதிர்மறையாகக் கொண்டு செப்பாமையும் உரித்தென்று கொண்டால் , பெருங்காப்பியம் என்ற அடைமொழியால் , அடுத்துள்ள காப்பியம் சிறுகாப்பியம் எனல் பெறப்படாதன்றோ என்பது தடை , அதற்கு அவர் தரும் விடை :- எடுத்த மொழிகளுக்கு இனம் ஒன்றாயக்கால் அவை இனம் செப்பும் ; பலவாயக்கால் இனம் செப்பா என்பது. எனவே பெருங்காப்பியத்திற்கு இனமாகக் காப்பியம் என்ற ஒன்றே கூறப்பட்டிருத்தலின் அது இனம் செப்புவதாம் என்பது.
காவ்யம் என்பது காப்பியம் எனத் திரிந்தது ; அது கவியாற் செய்யப்ப பட்டது எனப் பொருள்படும். எனவே கவிஞர்களால் பாடப்படுவன வெல்லாம் காவியம் எனப் பெயர்பெறவேண்டி யிருக்க, இப்பொருள் தொடர்நிலைச் செய்யுளை மட்டும் காப்பியம் என்றல் பொருந்துமா ? எனத்தாமே வினா எழுப்பிக்கொண்டு அதற்கு விடையும் கூறுகின்றார் உரையாசிரியர் . பங்கஜம் என்பது பங்கயம் எனத் திரிந்தது ; (பங்கம் - சேறு , ஜம் - தோன்றுவது) அது சேற்றுள் தோன்றுவது எனப் பொருள்படும் . எனவே , சேற்றுள் தோன்றுவன வெல்லாம் பங்கயம் என்றே பெயர் பெறவேண்டும் . ஆனால் அங்ஙனம் வழங்காது அப்பெயரைத் தாமரை யொன்றற்கே வழங்குவதுபோல இதனையும் கொள்ள வேண்டும் என்பது அவர் தரும் விடையாகும் . எனவே காப்பியம் , பங்கயம் என்பனவெல்லாம் காரண இடுகுறிப்பெயர் என்பது போதரும்.
'ஒழிந்தன' என்றது முத்தகம் முதலாக முற்கூறிய மூன்றையுமாம் . முக்தகம் என்பது முத்தகம் எனத் திரிந்து நின்றது . அது பிறிதொரு செய்யுளை அவாவாது தன்னில்தான் முடிந்துவிடுவது எனப்பொருள்படும். குளகம் - ஒரு செய்யுளில் ஒருபொருள் முடியாது பல செய்யுட்களால் ஒரு பொருள் முற்றுப்பெறுவது. இவை யிரண்டும் வடமொழிப் பெயர். தொகைநிலை -பல செய்யுட்கள் தொகுக்கபட்டது. தொடர் நிலை - பொருளினாலோ அன்றிச் சொல்லினாலோ தம்முள் தொடர்ந்து வருவது . இவையிரண்டும் தமிழ்ப்பெயர்.
மிகை - இன்றியமையாத தல்லாத சொல் . இந்நூற்பாவில் 'இயலும்' என்ற சொல் வேண்டுவதன்று . அஃது இன்றியும் பொருள் நன்கு விளங்கும் . அங்ஙனமாக அதனைக் கூறியது மிகையாம் . இம்மிகையால் கொள்ளப்படும் பொருள் இரண்டு. (1) பத்து வகைப்பட்ட நாடக சாதியும் , கோவையும் பொருள் தொடர்நிலைச் செய்யுளில் அடங்கும் . (2) முத்தகம் , குளகம் , தொகைநிலை என்ற மூவகைச் செய்யுட்களும் பொருள்தொடர்நிலைச் செய்யுட்கு உறுப்பாய் வரும் என்பது. (எனவே பொருள்தொடர்நிலைச் செய்யுட்களில் ஆங்காங்கெல்லாம் முத்தகமாகவும் , குளகமாகவும் செய்யுட்கள் வரும் என்பதாம் .)