பொதுவணியியல்9

பத்து வகைப்பட்ட நாடக சாதி :-

1.நாடகம் : - தற்புகழ்ச்சியற்ற நற்பண்புவாய்ந்த தலைவனை நாடகத் தலைவனாகக் கொண்டிருக்கும் , வீரம் அல்லது இன்பச் சுவை தழுவியதாய் , ஏனைச் சுவைகளையும் ஆங்காங்கு உடையதாய் , முகசந்தி , பிரதி முதசந்தி , கர்ப்பசந்தி , விமர்சசந்தி , நிர்வகனசந்தி ஆகிய ஐந்து சந்திகளையும் உடையதாய் ஐந்து அங்கங்கள் முதல் பத்து அங்கங்கள் வரையில் உள்ளதாய் அமைந்து விளங்குவது இதன் இலக்கணமாகும் . இதில் கூறப்படும் கதை புராணத்தில் உள்ளதாகவே இருக்கும்.

2. பிரகரணம் :- கற்பனைக் கதையாக இருக்கும் . வீரம் குறைந்தவனை நாடகத் தலைவனாகக் கொண்டிருக்கும் . இன்பச் சுவை மிகுதியாக இருக்கும் . ஏனைய இலக்கணங்கள் எல்லாம் முன்னர்க் கூறிய நாடக இலக்கணத்தை ஒத்திருக்கும்.

3. பாணம் :- கற்பனைக் கதையாக இருக்கும் . தீயவனையும் , தரமற்றவனையும் , நாடகத் தலைவனாகக் கொண்டிருக்கும் . இன்பச்சுவை , வீரச்சுவை ஆகிய இரண்டும் கலந்திருக்கும் . இதில் அமைந்த பேச்சுக்கள் உலகியல் நடையில் இருக்கும் . முகசந்தி , நிர்வகனசந்தி ஆகிய இரு சந்திகளை மட்டும் கொண்டு ஓரங்க நாடகமாக இருக்கும்.

4. பிரகசனம் :- ஒழுக்கமற்றவனை நாடகத் தலைவனாகக்கொண்டு நகைச்சுவை நிரம்பப் பெற்று இருக்கும் . ஏனைய இலக்கணங்கள் மேற்கூறிய பாணத்தை ஒத்து விளங்கும்.

5. டிமம் :- உலகறிந்த கதையாக இருக்கும் , தேவன் , கந்தருவன், அசுரன் முதலியவர்களுள் ஒருவனைத் தலைவனாகத் கொண்டு விளங்கும் . வெகுளிச் சுவை மிக்கும் , ஏனைய வீர , இன்பச் சுவைகள் ஆங்காங்கு இடம் பெற்றும் விளங்கும் . மாயை , இந்திரசாலம் , போர் ஆகிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருக்கும் . நான்கு அங்கங்களையும் நான்கு சந்திகளையும் கொண்டு விளங்கும்.

6. வியாயோகம் :- இதில் கூறப்படுவதும் உலகறிந்த கதையாக இருக்கும் . வீரச்சுவை மிக்கிருக்கும் . ஒரே நாளில் நடந்த கதையாயும் , அதுவும் போர் பற்றியதாயும் இருக்கும்.

7. சமவாகாரம் :- தேவர்களையும் அசுரர்களையும் நாடகத் தலைவனாகத் கொண்டிருக்கும் . வீரச்சுவை மிகுதியாக இருக்கும். ஒரே நாளில் நடந்த கதையை மூன்று யாமமாகப் பிரித்து , மூன்று அங்கங்களில் விவரிக்கப்பட்டிருக்கும்.

8. வீதி :- தீயவனைத் தலைவனாகக் கொண்டிருக்கும் , கற்பனைக் கதையாக இருக்கும். குறிப்பாக இன்பசுவை இருக்கும். இரண்டு சந்திகளையுடைய ஒரங்க நாடகமாக இருக்கும்.

9. அங்கம் :- உலக மக்களில் ஒருவனைத் தலைவனாகக் கொண்டிருக்கும் . உலகறிந்த கதையாகவும் இருக்கும் . கருணைச் சுவை மிகுதியாக இருக்கும் . பெண்களுடைய வாய்ச் சண்டை , விளையாட்டு ஆகிய இவை இடம் பெற்றிருக்கும்.