8. ஏதுவுவமை
எ-டு : ' வாளரவின் செம்மணியும் வன்னியிளம் பாசிலையும்
நாளிளைய திங்கள் நகைநிலவும் - நீளொளியால்
தேனுலவு பூங்கொன்றைத் தேவர்கோன் செஞ்சடைமேல்
வானுலவு விற்போல் வரும் '
(இ-ள்) ஒளியினையுடைய அரவின் சூட்டிலுண்டாகிய மணியானது சிவந்த வொளியை மிகுத்தலானும் , வன்னியாகிய மரத்தின் இளைய இலை தன்னுடைய பசுமையை மிகுத்தலானும் , குழவித் திங்களானது தன்னுடைய வெண்மையை மிகுத்தலானும் , தேனுலவப்பட்ட பொலிவையுடைய கொன்றையினது பூ தன்கண் உண்டாகிய புற்கென்ற நிறத்தை மிகுத்தலானும் , தேவர்கட்குத் தலைவனாகிய முக்கட் கடவுளுடைய சிவந்த சடையானது வான்மீது உண்டாகிய வில்லுப்போலத் தோன்றுகின்றது எ-று .
நகை - ஒளி . வில் - இந்திரவில் .
அஃதேல் உவமையை விரித்த சூத்திரங்களெல்லாம் ஒன்றாக்கி யுரையாது இரண்டாக்கி யுரைத்தது என்னை ? எனின் , மேலைச் சூத்திரத்திற் சொல்லப்பட்டன , 'சொல்லின் முடிவில் அப்பொருள் முடித்தல் ' என்னுந் தந்திர வுத்தியன ; இவை 'எதிரது நோக்கல் ' என்னுந் தந்திர வுத்தியன ; ஆதலால் , இரண்டாக வைத்தாரென்பது .
வி-ரை: இன்ன ஏதுவால் இதனை இது ஒக்கும் என ஏதுவோடு கூட்டி உவமிக்கப்படுவது ஏதுவுவமையாம் . இதன் இலக்கணத்தை 57 - ஆம் நூற்பாவில் காண்க .
சிவபெருமானுடைய சடை வானவில்லை யொக்கும் என்பதால் உவமையும் , அங்ஙனம் வானவில்லைச் சிவபெருமானுடைய சடை ஒப்பதற்குக் காரணம் வானவில்லில் இருக்கும் செம்மை, பசுமை , வெண்மை ஆகிய நிறங்களுக்கு ஏற்பச் சிவபெருமானுடைய சடையிலும் செம்மணி , வன்னி, திங்கள் ஆகிய முப்பொருளும் இருப்பதாலாம் என்பதால் ஏதுவும் கூறப்பட்டவா றறிக .
உவமையணியை இதுகாறும் இரு நூற்பாக்களால் விரித்துரைத்தார் ஆசிரியர் . முன்னையது 'விரியே தொகையே ' என்று தொடங்குவது . ஏனையது 'அற்புதம் சிலேடை ' எனத் தொடங்குவது . இவ்விரு வகைகையும் ஒன்றாக உரையாதது ஏன் ? என்னும் வினாவைத்தாமே எழுப்பிக் கொண்டு உரையாசிரியர் விடை தருகின்றார் . 'விரியே தொகையே' என்று தொடங்கும் நூற்பாவில் கூறப்பட்டன வெல்லாம் தத்தம் பெயரைக்கொண்டே தாமாக இலக்கணம் விளங்கும் இயல்பினவாம் . அடுத்து இந்நூற்பாவிற் கூறியன வெல்லாம் , இனிக் கூற இருக்கும் அணிகளை நோக்கி , அவற்றோடு கூடி வருவனவாகும் . இவ்வேறுபாடு பெறுதற்கே இரண்டாக உரைத்தார் என்பது .
உவமைக்கு எய்தியதோர் வேறுபாடு
33. மிகுதலுங் குறைதலுந் தாழ்தலும் உயர்தலும்
பான்மாறு படுதலும் பாகுபா டுடைய .