பொருளணியியல்59

எ-ன்: இதுவும் அவ்வுவமைக்கு எய்தியதொரு வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று .

(இ-ள்) உவமேய அடைக்கு உவமான அடை மிகப் புணர்தலும் , உவமேய அடைக்கு உவமான அடை குறையப் புணர்தலும் , இழிந்த உவமையோடு உயர்ந்த பொருள் உவமையாகலும் , உயர்ந்த உவமையோடு இழிந்த பொருள் உவமையாகலும் , ஆண்பாற்குப் பெண்பால் உவமையாகலும் பெண்பாற்கு ஆண்பால் உவமையாகலும் , ஒருமைப்பாற்குப் பன்மைப்பால் உவமையாகலும் , பன்மைப்பாற்கு ஒருமைப்பால் உவமையாகலு மாகிய வேறுபாடுடையன எ-று .

1'வேறுபாடுடைய' என்றது இவை புன்புலவர் புணர்க்குங்கால் மிக்கோரால் வெறுக்கப்படுவதோர் சிறப்பின்மை தெரிந்து குற்றமென்று கூறப்படும் ; அல்லதூஉம் தெள்ளியோரால் சிறப்புடையது என்று கொள்ளப் புணர்க்கவும்படும் என்றவாறு .

வி-ரை: இத்தகைய உவமைகள் ஓரளவு அறிவுடையவர்களால் கூறப்படின் குற்றம் என்று கருதப்படும் . இவையே அறிவிற் சிறந்த சான்றோர்களால் கூறப்படின் அவற்றின் சிறப்புடைமை நோக்கிக் கூறப்பட்டதென அறிந்து ஏற்றுக் கொள்ளப்படும் என்பது கருத்து .

அவற்றுட் சில வருமாறு : -

மிகுதல்

எ-டு : 'நீலப் புருவங் குனிய விழிமதர்ப்ப
மாலைக் குழல்சூழ்ந்த நின்வதனம் - போலும்
கயல்பாய வாசங் கவருங் களிவண்
டயல்பாய வம்போ ருகம் '

(இ-ள்) நீல நிறத்தை யுடைய புருவமானது முரியக் கண் மதர்ப்பப் பூமாலையை யுடைய குழலாற் சூழப்பட்ட நின்னுடைய முகம் போன்றது , கயல் மிளிர மதுவை யுண்கிற களித்த சுரும்பு பக்கத்திலேயே பரவ மலர்ந்த தாமரை எ-று .

இதனுள் உவமையாகிய முகத்திற் புருவ முரிவிற்கு ஒப்ப தொன்று , பொருளாகிய தாமரைக்கண் புணராமையின் , உவமேய அடைக்கு உவமான அடை மிக்கு வழுவாயிற்று .

வி-ரை: இதன்கண் முகம் உவமையாகவும் , தாமரை பொருளாகவும் கூறப்பட்டுள்ளது . உவமையாகிய முகத்திற்குப் புருவம் குனிதல் , விழி மதர்த்தல் , குழல் சூழ்தல் ஆகிய மூன்று அடைமொழிகளும் , பொருளாகிய தாமரைக்குக் கயல் பாய்தல் , வண்டு அயல் பாய்தல் ஆகிய இரு அடைமொழிகளும் கூறப்பட்டிருத்தலின் மிகுதற்கு எடுத்துக் காட்டாயிற்று . மிகுதல் - பொருளடையினும் உவமையடை மிகுதல் .


1. 'வேறுபாடு' என்பது , புன்புலவர் புணர்க்குங்கால் நன்புலவரால் வேறுபடுத்துச் சிறப்பின்மையிற் குற்றமெனக் கூறப்படுவதூஉம் , அல்லதூஉம் நன்புலவராற் சிறப்புடையவென்று கொள்ளப் புணர்க்கப்படுவதூஉம் ஆமென்க 'என்பதும் பாடம் .