64தண்டியலங்காரம்

எ-டு : 'வையந் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடராழி யானடிக்கே 1சூட்டினேன் சொன்மாலை
இடராழி 2நீங்குகவே யென்று' .

(இ-ள்) உலகமே தகளியாகவும் , நெடிய கடலே நெய்யாகவும் , வெம்மையை யுடைய பகலவனே விளக்காகவும் , சிவந்த நிறத்தை யுடைத்தாகிய சக்கரத்தை யுடையான் அடிக்கே சேர்த்தினேன் , சொல்லினால் தொடுத்த மாலையை , என்னுடைய துக்கமாகிய கடல் வறப்பதாக எ-று .

வி-ரை: தகளியா , நெய்யாக , விளக்காக என்ற இடங்களில் அவ்வுருபு விரிந்தும் , இடர்ஆழி என்றவிடத்து அவ்வுருபு தொக்கும்நிற்றலின் , இது தொகைவிரி யுருவகமாயிற்று .

(4) இயைபுருவகம் என்பது பல பொருளை உருவகஞ் செய்யுங்கால் தம்முள் இயைபுடையவாக வைத்து உருவகஞ் செய்வது .

எ-டு : ' செவ்வாய்த் தளிரும் நகைமுகிழுங் கண்மலரும்
மைவா ரளக மதுகரமும் - செவ்வி
உடைத்தாந் திருமுகமென் னுள்ளத்து வைத்தார்
3துடைத்தாரே யன்றோ துயர் '

(இ-ள்) சிவந்த வாயாகிய தளிரினையும் , நகையாகிய முல்லை அரும்பினையும் , கண்ணாகிய மலரினையும் , கரிய நீண்ட அளகமாகிய வண்டினையும் , செவ்வியினையும் உடைய கண்டாரால் விரும்புந் தன்மையுடைத்தாகிய முகத்தை யென்னுள்ளத்திலே வைத்தார் ; இதனாலே என்னுடைய உள்ளத்திலுண்டாகிய துயரத்தை நீக்குவாரன்றோ ? சொல்லுவீராக எ-று .

முகை - அரும்பு . இதனுள் தளிரும் , முகிழும் , மலரும் ,மதுகரமும் தம்முள் இயைபுடைமையின் , அப்பெயர்த்தாயிற்று .

வி-ரை: வாய் , நகை, கண், கூந்தல் ஆகியன ஒன்றற்கொன்று இயைபுடைய பொருள்கள் . இவற்றை முறையே தளிர் , அரும்பு , மலர் , வண்டுகளாகவும் , அவை தமக்குள் இயைபுடையனவாகவும் உருவகிக்கப் பட்டுள்ளமையின் இது இயைபுருவக மாயிற்று .

(5) இயைபிலுருவகம் என்பது பல பொருளுந் தம்முள் இயையாமை வைத்து உருவகஞ் செய்வது.

எ-டு : ' தேனக் கலர்கொன்றை பொன்னாகச் செஞ்சடையே
கூனற் பவளக் கொடியாகத் - தான
மழையாகக் கோடு மதியாகத் தோன்றும்
புழையார் தடக்கைப் பொருப்பு '

(இ-ள்) மதுவைக் காலுகின்ற கொன்றைமலர் பொன்னாகவும் , சிவந்த சடை வளைந்து நன்மையுடைத்தாகிய பவளக் கொடியாகவும் , மதம் மழையாகவும் , மருப்பு மதியாகவும் தோன்றாநின்றது , துளையை யுடைத்தாகிய பெரிய கையையுடைய யானையாகிய மலை எ-று .


1. 'சூட்டுவன்' என்பதும் .

2. 'நீங்கவே' என்பதும் பாடங்களாகும் .

3. 'துடைத்தாரே யன்றே' என்பதும் பாடம் .