பொருளணியியல்63

கொடியுளது, நான் நெருநற் கண்டது; நண்பனே ! அக் கொடிமேல் எழுந்த காதலுக்கு எல்லை உலகத்துண்டோ வெனில், இல்லையாயிருந்தது எ-று.

மாதர் - காதல். எழுதல்-செல்லுதல்.

வி-ரை:மாட்டேற்றுச் சொல் - பொருளில் உவமையை ஏற்றும் சொல். அது ஆகிய என்பதாம். 'அங்கை மலரும்' என்றவிடத்து அங்கை பொருளும், மலர் உவமையும் ஆகும். இப்பொருளில் உவமையாகிய மலரை எனவரும் அவ்வுருபு மறைந்து வருதலை தொகையுருவகம் என்பர்.

அங்கை மலர், அடித்தளிர், கண்வண்டு, கொங்கை முகிழ்,குழற்கார் மாதர்க் கொடி என்றவிடங்களில் ஆகிய என்னும் உருபு தொக்கு வருதலின் இது தொகையுருவகம் ஆயிற்று.

ஆகிய என்ற உருபு ஆக, ஆ எனக் குறைந்து நிற்றலும் உண்டு. அவை தொக்குநிற்பினும் தொகையுருவகமேயாம்.

(2) விரியுருவகம் என்பது அச்சொல் விரிந்து நிற்பது.

எ-டு: கொங்கை முகையாக மென்மருங்குல் கொம்பாக
அங்கை மலரா அடிதளிராத் - திங்கள்
அளிநின்ற மூர லணங்காம் எனக்கு
வெளிநின்ற வேனிற் றிரு.

இ-ள்: கொங்கை அரும்பாக, நுண்ணிடை வஞ்சிக் கொம்பாக, அழகிய கையே மலராக, அடி தளிராக, நிலவு போல வெள்ளிய ஒளியினை யுடைத்தாய், நெருநல் தோன்றிய அணங்கு போன்று இருந்தாள், இப்பொழுது எனக்கு இளவேனிற் காலத்தைக் கொண்டு வெளிப்பட்ட திருவை யொப்பாள் எ-று.

இவையிரண்டும் எல்லாவற்றிற்கும் பொதுவிலக்கணம். இதனுள் தொகையை முற்கூறியது ,உவமை விரித்த சூத்திரம் நோக்கி `முந்து மொழிந்ததன் தலை தடுமாற்றம்' என்னுந் தந்திர வுத்தியான்.

வி-ரை:இப்பாடலில் முகையாக கொம்பாக என்ற இடங்களில் 'ஆக' என்ற உருபு விரிந்தும், மலரா , தளிரா என்ற இடங்களில் 'ஆ' என்பது விரிந்தும் நிற்றலின் விரியுருவக மாயிற்று.

இவையிரண்டும் - உவம உருபு மறைந்து வருதலும் , விரிந்து வருதலும், எல்லாவற்றிற்கும் பொதுவிலக்கணம் - பின்னர் இவ்வுருவக வேறுபாடாகக் கூறப்படும் அணிகட்கு எல்லாம் பொது என்பதாம்.

முந்து மொழிந்ததன் தலை தடுமாற்றம் -முன்பு கூறிய முறைமைக்கு மாறாகப் பின்பு கூறுதல். உவமையின் வகையை விரிக்குங்கால் 'விரியே தொகையே ' எனக் கூறினார்; ஈண்டு உருவகத்தை விரிக்குங்கால் 'தொகையே விரியே' எனக் கூறுகின்றார். ஆதலின், இது முந்துமொழிந்ததன் தலைமாற்றமாம்.

(3) தொகைவிரியுருவகம் என்பது அச்சொல் தொக்கும் விரிந்தும் நிற்பது.