பொருளணியியல்67

வி-ரை: இப்பாடலில் எடுத்துக் கூறப்பட்ட பொருள் ஒரு பெண் ஆவள் . அப்பெண்ணின் உறுப்புக்களான கை , வாய் , கண் , மெய் , கொங்கை ஆகியவற்றை முறையே காந்தள் , குமுதம் , நெய்தல் , தளிர் , கோங்கரும்பு என நன்றாக உருவகஞ் செய்து , இத்தகைய உறுப்பு நலமுடைய பெண்ணே தன்னாவியை வருத்துவதாக அவ்வழகு நலத்திற்குத் தீங்கு கூறி , அத்தீங்கும் தன்னுடைய தீவினைப் பயனாலேயே வந்ததாம் என அதற்குப் பிறிதொரு காரணமும் கூறியிருத்தலின் இது சமாதான உருவகமாயிற்று .

முதற்கண் பெண்ணால் தீங்கு வந்ததாகக் கூறிப் , பிறகு அதுவும் தன் தீவினையினாலேயே வந்தது எனச் சமாதானம் செய்து கொள்கின்றமையின் , இது சமாதான உருவகம் எனப் பெயர் பெற்றது .

(10) உருவகவுருவகம் என்பது ஒன்றனை உருவகஞ் செய்து , அதனையே பெயர்த்தும் பிறிதொன்றாக உருவகஞ் செய்வது .

எ-டு : ' கன்னிதன் கொங்கைக் குவடாங் கடாக்களிற்றைப்
பொன்னெடுந்தோட் குன்றே புனைகந்தா - மன்னவநின்
ஆகத் தடஞ்சே வகமாக யான்அணைப்பல்
சோகித் தருளேல் துவண்டு '

இ-ள்: தலைவனே ! நீ காதலித்த கன்னியுடைய முலையென்னும் மலையாகிய மதக்களிற்றை , நின் பொற்கலனணிந்த பெரிய தோளாகிய குன்றமே திரளச் செய்யப்பட்ட கந்தாகவும் , மார்பாகிய பரந்த இடமே கூடமாகவும் , யான் சேர்த்துவன் ; நீ அழகழிந்து வருந்தாதொழிக எ-று .

கடாம் - மதம் . புனைதல் - செய்தல் . சேவகம் - யானைக் கூடம் . துவளுதல் - அழகழிதல் . கந்து - தறி . மன்னவன் - தலைவன் . குவடு - மலை .

இதனுள் கொங்கையைக் குவடாக உருவகஞ்செய்து , அதனையே மீண்டும் களிறாக உருவகஞ் செய்தவாறு காண்க .

வி-ரை: இப்பாடலில் கொங்கையைக் குவடாக உருவகஞ் செய்து , அதனையே மீண்டும் களிறாகவும் , தோளைக் குன்றாக உருவகஞ் செய்து , அதனையே மீண்டும் கந்தாக (கட்டுத்தறியாக)வும் உருவகம் செய்யப்பட்டுள்ளமையின் , இது உருவக வுருவகமாயிற்று .

(11) ஏகாங்கவுருவகம் என்பது ஒரு பொருளினது அங்கம் பலவற்றுள்ளும் ஓரங்கமே உருவகஞ் செய்து , ஒழிந்த அங்கங்களை வாளாவே கூறுவது .

எ-டு : ' காதலனைத் தாவென் றுலவுங் கருநெடுங்கண்
ஏதிலனால் யாதென்னும் இன்மொழித்தேன் - மாதர்
மருண்ட மனமகிழ்ச்சி வாண்முகத்து வந்த
இரண்டினுக்கும் என்செய்கோ யான் '

(இ-ள்) நெஞ்சமே ! எமக்கொரு கணவனைத் தருவாயாக என்பது போன்றிருந்தது , காதளவும் உலவுகின்ற கரிய நெடிய கண்கள் ; அயலானாற் பயனில்லை என்பது போன்றிருந்தது , இனிய தேனாகிய மொழி ; மாதருடைய கண்டார்க்கு மயக்கத்தோடு கூடிய உள்ளக் களிப்பைக் கொடுக்கின்ற ஒளியையுடைய முகத்திலே தோற்றிய இவ்விரண்டினுக்கும் யான் என்ன செய்யக் கடவேன் ? எ-று .