ஏதிலன் - அயலான் .
வி-ரை: இப்பாடலில் கூறப்பட்ட பொருள் ஒரு பெண் ஆவள் . அப்பெண்ணின் உறுப்புக்களுள் மொழியை மட்டும் தேனாக உருவகித்து , ஏனைய கண் , முகம் இரண்டையும் உருவகஞ் செய்யாது வாளா கூறினமையின் , இது ஏகாங்க உருவகமாயிற்று .
(12) அநேகாங்கவுருவகம் என்பது ஒன்றன் அங்கம் பலவற்றையும் உருவகஞ் செய்து உரைப்பது .
எ-டு : ' கைத்தளிராற் கொங்கை முகிழ்தாங்கிக் கண்ணென்னும்
மைத்தடஞ்சேல் மைந்தர் மனங்கலங்க - வைத்ததோர்
மின்னுளதால் மேக மிசையுளதால் மற்றதுவும்
என்னுளதாம் நண்பா ! இனி '
(இ-ள்) கையாகிய தளிரினாலே முலையாகிய அரும்பினைத் தாங்குகின்ற தன்மையையுடைத்தாகவும் , கண்ணெனப்பட்ட கரிய குளிர்ந்த சேல்களாலே ஆடவர் உள்ளங்களை அழிக்குந் தன்மையையுடைத்தாகவும் , கறுத்த மேகத்தைச் சுமந்துகொண்டு நிற்பதாகவும் , ஒரு மின் தோன்றிப் பூமிக் கண்ணே நின்றதேல் , அது நண்பனே ! என் உள்ளத்ததுவேயாம் எ-று .
வைத்தல் - தோற்றுதல் . மற்று - அசை .
வி-ரை: இப்பாடலில் ஒரு பெண்ணின் கை , கொங்கை , கண் , கூந்தல் , வடிவம் ஆகிய பலவுறுப்புக்களும் முறையே தளிர் , கோங்கரும்பு , கயல் , மேகம் , மின்னல் ஆக உருவகிக்கப்பட்டுள்ளமையின் இது அநேகாங்க வுருவகமாயிற்று .
அங்கம் , அவயவம் , உறுப்பு என்பன ஒரு பொருளன . அங்கி , அவயவி , உறுப்பி என்பன ஒரு பொருளன . உறுப்பி - உறுப்பினையுடையது .
(13) முற்றுருவகம் என்பது அவயவ அவயவிகளை ஏற்ற இடத்தோடும் , பிறவற்றோடும் முற்ற உருவகஞ் செய்து உரைப்பது .
எ-டு : ' விழியே களிவண்டு மென்னகையே தாது
மொழியே முருகுலாந் தேறல் - பொழிகின்ற
தேமருவு கோதைத் தெரிவை திருமுகமே
தாமரையென் னுள்ளத் தடத்து '
(இ-ள்) தேன் மருவிய கூந்தலையுடைய தெரிவை திருமுகமே தாமரை , விழிகளே களிக்கின்ற வண்டு , மெல்லியவாகிய நகையே தாது , வார்த்தையே நறுநாற்றம் உலாவுகின்ற மது , என் உள்ளமாகிய தடாகத்து எ-று .
நகை - பல் . தாது - அகவிதழ் . முருகு - நறுநாற்றம் . உலவுதல் - உண்டாதல் . தேறல் - மது . தேம் - தேன் .
வி-ரை: இப்பாடலில் ஒரு பெண்ணின் விழி , நகை , மொழி , முகம் ஆகிய உறுப்புக்களை முறையே வண்டு , தாது , தேன் , தாமரை ஆக உருவகித்து , அது தன் உள்ளத்தில் இருப்பதற்கு ஏற்ப உள்ளத்தைக் குளமாகவும் உருவகித்துள்ளமையின் இது முற்றுருவகம் ஆயிற்று .
(14) அவயவவுருவகம் என்பது அவயவத்தை உருவகஞ் செய்து , அவயவியை வாளாவே கூறுவது .