எ-டு : ' புருவச் சிலைகுளித்துக் கண்ணம்பெ னுள்ளத்
துருவத் துரந்தார் ஒருவர் - அருவி
பொருங்கற் சிலம்பிற் புனையல்குல் தேர்மேல்
மருங்குற் கொடிநுடங்க வந்து '
(இ-ள்) அலங்கரிக்கப்பட்ட அல்குலாகிய தேரின்மேல் ஏறி , இடையாகிய கொடி யசைய வந்து , அருவி யலைக்கப்பட்ட மலைச் சிலம்பினிடத்திலே தோற்றித் தம்முடைய புருவமாகிய வில்லை வளைத்துக் , கண்ணாகிய அம்பினாலே என் உள்ளத்திலே உருவிப் போக ஒருவர் எய்தார் ; இதற்குச் செய்யக்கடவது என்கொல் ? சொல்லுவாயாக எ-று .
'மலைப்பக்கத்திலே வந்து தோன்றி எய்தார் ' எனக் கூட்டுக . சிலம்பு - மலையடி .
வி-ரை: இப்பாடலில் ஒரு பெண்ணின் புருவம் , கண் , அல்குல் , மருங்குல் ஆகிய உறுப்புக்களை மட்டும் உருவகித்து , இவ்வுறுப்புக்களையுடைய பெண்ணை மட்டும் 'ஒருவர்' என வாளாவே கூறியுள்ளமையின் , அது அவயவ வுருவகம் ஆயிற்று .
ஒரு பொருளது உறுப்புக்கள் பலவற்றையும் உருவகம் செய்துரைப்பதில் இதுவும் , அநேகாங்க உருவகமும் ஒக்குமேனும் , இது அவ்வுறுப்பியை (அவயவியை) உருவகஞ் செய்யாது விடுத்தும் , அது அவ்வுறுப்பியையும் உருவகஞ் செய்தும் நிற்றல் காண்க . இவை தம்முள் வேற்றுமை .
(15) அவயவியுருவகம் என்பது அவயவியை உருவகஞ் செய்து , அவயவங்களை வாளாவே கூறுவது .
எ-டு : ' வார்புருவங் கூத்தாட வாய்மழலை சோர்ந்தசைய
வேரரும்பச் சேந்து விழிமதர்ப்ப - மூரல்
அளிக்குந் தெரிவை வதனாம் புயத்தால்
களிக்குந் தவமுடையேன் கண் '
(இ-ள்) நல்லாருடைய புருவம் அசைய , வாயில் வார்த்தையானது உருத்தெரியாது அழிந்து தளரக் , குறுவியர்ப்பை யுடைத்தாக , விழியானது சிவந்து மதர்ப்ப , முறுவலிப்பதொரு 1முகமாகிய தாமரையினாலே களிக்குந் தன்மையைப் பெற்றது ; முற்காலத்தில் யான் செய்த நல்வினைப் பயத்தினாலே , எனது கண் எ-று .
மழலை - உருவந் தெரியாச்சொல் . சோர்தல் - அழிதல் . அசைதல் - தளர்தல் . சேந்து - சிவந்து . மூரல் - நகை . தவம் - நல்வினை .
வி-ரை: இப்பாடலில் கூறப்படும் பெண்ணின் முகம் அவயவியாகும் . அதனை மட்டும் தாமரையென உருவகித்து , அதன்கண்ணுள்ள உறுப்புக்களான புருவம் , மழலை , விழி , முறுவல் ஆகியவற்றை உருவகியாது வாளாவே கூறியுள்ளமையின் , இது அவயவி யுருவகமாயிற்று .
உருவகம் பிற அணிகளுடன் கூடிவரும் எனல்
37. உவமை ஏது வேற்றுமை விலக்கே
அவநுதி சிலேடையென்(று) அவற்றொடும் வருமே .
1. 'தாமரையாகிய முகத்தினாலே' என்பதும் பாடம் .