எ-ன் , அவ்வுருவக அலங்காரம் பிற அலங்காரங்களோடும் கூடி வருமாறு உணர்த்துதல் நுதலிற்று .
இ-ள்: உவமையும் , ஏதுவும் , வேற்றுமையும் , விலக்கும் , அவநுதியும் , சிலேடையும் என்னும் ஆறு அலங்காரங்களோடு கூடியும் வரும் அவ்வுருவக அலங்காரம் எ-று .
1. உவமையுருவகம்
அவற்றுள் ,
எ-டு : ' மதுமகிழ்ந்த மாதர் வதன மதியம்
உதய மதியமே யொக்கும் - மதிதளர்வேன்
வெம்மை தணிய மதராக மேமிகுக்கும்
செம்மை யொளியால் திகழ்ந்து '
இ-ள்: மதுவுண்டு களித்த மடவாருடைய முகமதியம் , உதயஞ் செய்த நிறை மதியம் போன்றது ; அறிவழியுந் தன்மையை யுடையேனுடைய ஆற்றலழியக் களிப்போடு கூடிய காதலைப் பெரிதும் புலப்படுத்தித் தோற்றுகின்ற சிவந்த நிறத்தாலே அழகு பெற்று எ-று .
மதம் - களிப்பு . ராகம் - காதல் . திகழ்தல் - அழகுபெறுதல் .
இதனுள் முக்கியப்பொருளையும் குணப்பொருளையும் ஒப்புமை காட்டினமையான் , உவமையுருவகமாயிற்று .
வி-ரை: உவமையணியோடு கூடிவரும் உருவகம் உவமையுருவகம் ஆகும் , முகத்தை மதியமாக உருவகித்துப் பின்பு அது உதய மதியத்தை ஒக்கும் என உவமையோடுகூட்டிக் கூறுதலின் இது உவமையுருவக மாயிற்று .
'வதன மதியம் ' என உருவகித்துப் பின்பு 'உதய மதியமே ஒக்கும்' என்றல் 'கூறியது கூறல்' போன்று தோன்றும் . எனினும் இதற்கு 86 ஆம் நூற்பாவில் அமைதி கூறுவர் . அதனை ஆண்டுக் காண்க .
முக்கியப் பொருள் - பொருள் (உபமேயம்), குணப் பொருள் - உவமை .
2. ஏதுவுருவகம்
எ-டு : ' மாற்றத்தால் கிள்ளை நடையால் மடவன்னம்
தோற்றத்தால் தண்ணென் சுடர்விளக்கம் - போற்றும்
இயலால் மயில்எம்மை யிந்நீர்மை யாக்கும்
மயலார் மதர்நெடுங்கண் மான் '
இ-ள்: நண்பனே ! எம்மை இப்படித் தாழ்வு பண்ணிய நெடிதாய்ச் சிவந்து காதலைக் கொடுக்கின்ற கண்களை யுடைமையான் மான் போன்றாள் ; மொழியினால் கிள்ளை யாயினாள் ; நடையினால் மடவிய அன்னமாயினாள் ; மேனியால் குளிர்ந்த உருவத்தையுடைய விளக்கின் நிறமாயினாள் ; யாவரும் பரவப்படும் சாயலால் மயிலாயினாள் எ-று .
சுடர் - விளக்கு . விளக்கம் - நிறம் . மயல் - காதல் . மதர் - சிவப்பு .
வி-ரை: ஏது அணியோடு கூடிவரும் உருவகம் ஏது வுருவகம் ஆகும் . இப்பாடலில் ஒரு பெண்ணைக் கிளியாகவும் , அன்னமாகவும் , விளக்காகவும் , மயிலாகவும் உருவகம் செய்ததோடு, அவ்வப்பொருளாக உருவகம் செய்ததற்குரிய காரணங்களையும் உடன் கூறியுள்ளமையின் இது ஏதுவுருவகமாயிற்று .