பொருளணியியல்71

3. வேற்றுமையுருவகம்

எ-டு : ' வையம் புரக்குமால் மன்னவநின் கைக்காரும்
பொய்யின்றி வானிற் பொழிகாரும் - கையாம்
இருகார்க்கு மில்லைப் பருவம் இடிக்கும்
ஒருகார் பருவம் உடைத்து '

இ-ள்: அரசனே ! உன்னுடைய கையாகிய மேகமும் , காலம் பிறழாது ஆகாயத்தின்கண் நின்று பொழிகின்ற மேகமும் , உலகத்தைப் புரக்குந் தன்மையில் ஒக்குமாயினும் , கையென்கிற இரண்டு மேகங்களுக்கும் பருவமில்லை ; இடியையுடைய ஒரு மேகத்துக்குப் பருவமுண்டு எ-று .

ஆல் -அசை . இதனுள் குணப்பொருளையும் , முக்கியப் பொருளையும் 'வையம் புரக்கும்' என்று ஒப்புமை காட்டிக் , 'கைக்காருக்குப் பருவமில்லை ; ஏனைக்கார் பருவமுடைத்து' என்று வேற்றுமை செய்தமையின் , அப்பெயர்த்தாயிற்று .

வி-ரை: வேற்றுமை அணியோடு கூடிவரும் உருவகம் வேற்றுமை யுருவகம் ஆகும் . அரசனின் கையை மேகமாக உருவகித்துப் , பின்பு அம்மேகத்திற்கும் கைக்கும் வேற்றுமை காட்டியுள்ளமையின் , இது வேற்றுமையுருவக மாயிற்று .

4. விலக்குருவகம்

எ-டு : ' வல்லி வதன மதிக்கு மதித்தன்மை
இல்லை யுளதேல் இரவன்றி - எல்லை
விளக்கு மொளிவளர்த்து வெம்மையால் எம்மைத்
துளக்கும் 1இயல்புளதோ சொல்'

இ-ள்: வல்லியாயினாள் முகமாகிய மதியத்திற்கு , மதியினுடைய தன்மையில்லை போலும் ; உண்டாயின் , பகற்பொழுது தன்னிடத்திலே ஒளியை மிகுத்து நம்மை வருத்தி அறிவையழிக்கும் இயல்புடைத்தாமோ ? நண்பனே ! சொல்லுவாயாக எ-று .

வி-ரை: விலக்கு அணியோடு கூடிவரும் உருவகம் விலக்குருவகமாகும், இப்பாடலில் ஒரு பெண்ணின் முகத்தை மதியமாக உருவகித்துப் பின்பு அம்முகத்திற்குள்ள தன்மை மதியத்திற்கு இல்லை என விலக்கலின் விலக்குருவகம் ஆயிற்று .

5. அவநுதியுருவகம்

எ-டு : ' பொங்களக மல்ல புயலே யிதுஇவையும்
கொங்கை யிணையல்ல கோங்கரும்பே - மங்கைநின்
மையரிக்கண் அல்ல மதர்வண் டிவைஇவையும்
கையல்ல காந்தள் மலர் '

இ-ள்: மங்கைப் பருவத்தை யுடையவளே ! உன்னுடைய மிக்க கருமையை யுடைய கூந்தலன்று , இது மேகப்பரப்பே ; இரண்டாகிய தனங்கள் அல்ல , இவை கோங்கரும்புகளே ; மையணிந்த செவ்வரி பரந்த கண்கள் அல்ல , இவை செருக்கினையுடைய வண்டுகளே ; கையல்ல , காந்தள் மலர்களே எ-று .


1. ' இயல்புடைத்தோ ' என்பது பாடம் .