சொற்களோடு பொருந்திப் பொருள் விளைப்பது தீவகம் என்னும் அலங்காரமாம். அது செய்யுளில் முதல்,இடை,கடை என மூன்றிடத்துப் புலப்படும் எ-று.
எனவே, அது முதனிலைத் தீவகம், இடைநிலைத் தீவகம்,கடைநிலைத் தீவகம் என மூன்றாகி நடக்கும் என்றவாறு. இம் மூன்றையும் குணம், தொழில், சாதி, பொருள் என்பனவற்றோடு கூட்டி யுறழப் பன்னிரண்டா மெனக் கொள்க. இதன் அகலம் உரையிற் கொள்க.
1. முதனிலைக் குணத்தீவகம்
அவற்றுள்,
எ-டு: 'சேந்தன வேந்தன் திருநெடுங்கண் தெவ்வேந்தர்
ஏந்து தடந்தோள் இழிகுருதி --பாய்ந்து
திசையனைத்தும் வீரச் சிலைபொழிந்த, வம்பும்
மிசையனைத்தும் புட்குலமும் வீழ்ந்து.
இதனுள் கண்களும், தோள்களும், திசைகளும், அம்புகளும், புட்குலங்களும் சிவந்தன என்க.
வி-ரை, இ-ள்: அரசனுடைய அழகிய நீண்ட கண்கள் வெகுளியாற் சிவந்தன; அங்ஙனம் அவை சிவந்த அளவிலே பகைவர்களுடைய உயர்ந்த பெரிய தோள்கள், அம்புகள் தைக்கப்பட்டுச் சிவந்தன; அத்தோள்களின்றும் பெருகுகின்றன குருதி எங்கும் பரத்தலால் திக்குகள் எல்லாம் சிவந்தன; அக்குருதி தோய்தலால் வில்லினின்றும் வெளி வந்த அம்புகள் சிவந்தன; அக்குருதி மேல்படுதலால் பறவை யினங்கள் அனைத்தும் சிவந்தன என்பதாம்.
'சிவத்தல்' என்பது நிறம்பற்றிய பண்புச் சொல், முதற்கண் இருக்கும் அச்சொல் கண், தோள், திசை, அம்பு,புட்குலம் ஆகிய சொற்களோடும் இயைந்து பொருள் தருதலின் இது முதனிலைக் குணத்தீவகம் ஆயிற்று.
2. முதனிலைத் தொழில்தீவகம்
எ-டு: 'சரியும் புனைசங்குந் தண்டளிர்போல் மேனி
வரியும் தனதடஞ்சூழ் வம்பும் --- திருமான
ஆரம் தழுவுந் தடந்தோள் அகளங்கன்
கோரந் தொழுத கொடிக்கு'
வரி -- அழகு. கோரம் - சோழன்குதிரை. இதனுள் வளையும், அழகும், கச்சும் சரியும் என்க.
வி-ரை:குதிரைமீது சோழன் பவனி வரக் கண்ட ஒரு பெண்ணின் ஆற்றாத் தன்மையை எடுத்துச் சொல்வது இப்பாடல் ஆகும்.
இ-ள்: திருமகள் தங்குதற்கான பெருஞ் சிறப்புடையதும், முத்து மாலை யணிந்ததுமான தோள்களையுடைய குற்றமில்லாத சோழனுடைய குதிரையை வணங்கிய பூங்கொடி போன்ற பெண்ணுக்கு, அவள் கையில் அணிந்த வளையல்களும் சரிந்தன; குளிர்ந்த தளிர் போன்ற மேனியில் அழகும் சரிந்தது; பெருத்த கொங்கைகளின் மீதுள்ள கச்சும் சரிந்தது என்பதாம்.
'சரிதல்' என்பது தொழில்பற்றிய சொல். முதற்கண் இருக்கும் அச்சொல் வளையல், மேனியழகு, கச்சு ஆகிய சொற்களுடன் இயைந்து பொருள் படுதலின் இது முதனிலைத் தொழில் தீவகம் ஆயிற்று.