3. முதனிலைச் சாதித்தீவகம்
எ-டு: 'தென்றல் அனங்கன் துணையாஞ் சிலகொம்பர்
மன்றல் தலைமகனாம் வான்பொருள்மேற் - சென்றவர்க்குச்
சாற்றவிடுந் தூதாகும் தங்கும் பெரும்புலவி
மாற்ற வருவிருந்து மாம்'
இதனுள் தென்றல் துணையாதலும், தலைமகனாதலும், தூதாதலும், விருந்தாதலும் கண்டு கொள்க.
வி-ரை:தென்றற் காற்றின் தன்மையை எடுத்துக் கூறுவது இப்பாடலாகும்.
இ-ள்: தென்றற் காற்றானது காமவுணர்ச்சியைத் தூண்டுதலால் மன்மதனுக்குத் துணையாகும் ; தான் வரச் சில பூங்கொம்புகள் தளிர்த்தலின் அக்கொம்புகளாகிய பெண்களுக்குக் கணவனாகும்; சிறந்த பொருள்மேல் சென்றாரை நினைத்து வருந்தும் தலைவியர்க்கு இன்பவுணர்ச்சியை வூட்டுதலில் அவர்கள் தம் விருப்ப மிகுதியைத் தம் கணவர்பால் சொல்லுதற்காக அனுப்பப்படும் தூதாகும்;கணவனிடத்து ஊடிய பெண்டிர்க்கு இன்பவுணர்ச்சியைத் தூண்டுதலால் தாம் கொண்டிருந்த ஊடலை நீக்குதற்கு வந்த புதிய வாயிலாகும் என்பதாம்.
' தென்றற் காற்று' என்பது காற்றில் ஒர் இனத்தைக் குறித்தலின் இது சாதிபற்றிய சொல்லாம், முதற்கண் இருக்கும் அச்சொல் துணை, தலைமகன், தூது, வாயில் ஆகிய நான்கிடத்தும் சென்றியைந்து பொருள் படுதலின் இது முதளிலைச் சாதித் தீவகம் ஆயிற்று.
4. முதனிலைப் பொருள்தீவகம்
எ-டு: 'முருகவேள் சூர்மா முதல்தடிந்தான் வள்ளி
புரிகுழல்மேல் மாலை புனைந்தான் - சரணளித்து
மேலாய வானோர் வியன்சேனை தாங்கினான்
வேலான் இடைகிழித்தான் வெற்பு'
இதனுள் முருகவேள் பொருள்.
வி-ரை:இது முருகப்பெருமானின் பல்வேறு செயல்களையும் குறிக்கும் பாடலாகும்.
இ-ள்: முருகவேள் சூரபதுமனாகிய மாமரத்தை அடியோடும் சாய்த்தான்; வள்ளியம்மையின் அழகிய கூந்தலில் மாலையைப் புனைந்தான்; மேன்மை பொருந்திய தேவர்கட்கு அடைக்கலம் தந்து அவர்களின் சேனைகனைக் காத்தருளினான்; தன்னுடைய வேலினாலே கிரௌஞ்சகிரியைப் பிளந்தான் என்பதாம்.
இதன்கண் உள்ள ' முருகவேள்' என்னும் முதற்சொல் பொருள்குறித்த சொல்லாகும். அச்சொல் தடிந்தான், புனைந்தான், தாங்கினான், கிழித்தான் என்னும் சொற்களோடு இயைந்து பொருள்படுதலின் இது முதனிலைப் பொருள் தீவகம் ஆயிற்று.