5. இடைநிலைக் குணத்தீவகம்
எ-டு: 1 எடுத்த நிரைகொணா வென்றலுமே வென்றி
வடித்திலங்கு வைவாளை வாங்கத் - துடித்தனவே
தண்ணார மார்புந் தடந்தோளும் வேல்விழியும்
எண்ணாத மன்னர்க கிடம்.
இதனுள் துடித்தல், பண்பு.
வி-ரை, இ-ள்: தாம் கவர வேண்டுமென நினைத்த ஆனிரைகளைக் கொண்டு வருக என அரசன் கூறிய அளவிலே, அவனது வீரன் வெற்றி பொருந்திய கூரிய வாளை வலக்கையில் ஏந்தினானாகப், பகைவர்களுக்குக் குளிர்ச்சி பொருந்திய முத்துமாலை யணிந்த மார்பும், நீண்ட கண்ணும், இடது பக்கம் துடிப்பனவாயின என்பதாம்.
இப்பாடலின் இடையிலிருக்கும் 'துடித்தல்' என்னும் பண்புகுறித்த சொல் மார்பு, கண் ஆகிய சொற்களோடு இயைந்து பொருள்படுதலின், இது இடைநிலைக் குணத்தீவகம் ஆயிற்று.
துடித்தல், தொழிலேனும் பண்பில் அடங்கும்.
6. இடைநிலைத் தொழில்தீவகம்
எ-டு: 'எடுக்குஞ் சிலைநின் றெதிர்ந்தவருங் கேளும்
வடுக்கொண் டுரந்துணிய வாளி - தொடுக்கும்
கொடையும் திருவருளுங் கோடாத செங்கோல்
நடையும் பெரும்புலவர் நா.'
இதனுள் தொடுத்தல், தொழில்.
வி-ரை, இ-ள்: ஒரு பேரரசன் தனக்குப் பகை ஆயினாரும், அவர்களுக்குத் துணை ஆயினுரும் வடுப்பட்டு அவர்கள் மார்பு பிளக்குமாறு தன் கையிலேந்திய வில்லில் அம்புகளைத் தொடுக்க, அவ்வளவிலேயே பெரும் புலவர்களின் நாவானது அப்பேரரசனின் கொடையையும், மேலான அருளையும், வளையாத செங்கோலின் திறனையும் பாக்களில் தொடுத்துப் புகழ்வ தாயின எனபதாம்.
இப்பாடலின் இடையிலிருக்கும் ' தொடுத்தல் ' என்னும் தொழில் குறித்தசொல்,கொடை,அருள், நடை ஆகிய இடங்களோடும் சென்றியைந்து பொருள்படுதலின்,இது இடைநிலைத் தொழில் தீவகம் ஆயிற்று.
7. இடைநிலைச் சாதித்தீவகம்
எ-டு: ' கரமருவு பொற்றொடியாங் காலிற் கழலாம்
பொருவில் புயவலய மாகும் -அர (வு) அரைமேல்
நாணாம் அரற்கு நகைமணிசேர் தாழ்குழையாம்
பூணாம் புனைமாலை யாம்'
இதனுள் அரவு, சாதி.
வி-ரை, இ-ள்: நாகமானது சிவபெருமானுக்குக் கையில் பொருந்திய அழகிய வளையாகும்; காலில் அணியும் வீரக்கழலாகும்; ஒப்பில்லாத தோள் வளையமாகும்; அரையில் அணியும் அரைஞாணாகும்; ஒளியினையுடைய மனி
1. 'எடுத்த திரைகொணரார் ' என்பதும் பாடம்,