கள் பதித்த தொங்குகின்ற குழையாகும்; மற்றும் பல ஆபரணங்களாகும்; அழகிய மாலையாகும் என்பதாம்.
இப்பாடலில் இடையிலிருக்கும் ' அரவு ' என்னும் சாதி குறித்த ஒரு சொல் தொடி, கழல், புயவலயம், நாண், குழை, பூண், மாலை ஆகிய சொற்களோடும் சென்றியைந்து பொருள்படுதலின். இது இடைநிலைச் சாதித்தீவகம் ஆயிற்று.
8. இடைநிலைப் பொருள்தீவகம்
எ-டு: 'மானமருங் கண்ணாள் மணிவயிற்றில் வந்து தித்தான்
தானவரை யென்றுந் தலையழித்தான் - யானைமுகன்
ஒட்டினான் வெங்கலியை யுள்ளத் தினிதமர்ந்து
வீட்டினான் நம்மேல் வினை.
இதனுள் யானைமுகன், பொருள்.
வி-ரை:இப்பாடல் விநாயகப் பெருமானைப் பற்றியதாகும்.
இ-ள்: விநாயகப் பெருமான் மானின் பார்வையை யொத்த கண்ணினை யுடைய உமையம்மையாரின் அழகிய திருவயிற்றில் வந்து பிறந்தான்; எஞ்ஞான்றும் அசுரர்களை அழித்தான் ; கொடிய வறுமையைப் போக்கினான்; நம்முடைய உள்ளத்தே வீற்றிருந்து நம்மீதுள்ள வினைக் பகையை அழித்தான் என்பதாம்.
இப்பாடலின் இடையில் இருக்கும் 'யானைமுகன்' என்னும் பொருள் குறித்த ஒருசொல். உதித்தான், அழித்தான், ஒட்டினான், வீட்டினான் என்னும் சொற்களோடு இயைந்து பொருள்படுதலின், இது இடைநிலைப் பொருள் தீவகம் ஆயிற்று.
9. கடைநிலைத் தொழில்தீவகம்
எ-டு: ' துறவுளவாச் சான்றோர் இளிவரவுந் தூய
பிறவுளவா வூன்துறவா வூணும் -- பறைகறங்கக்
கொண்டா னிருப்பக் கொடுங்குழையாள் தெய்வமுமொன்
றுண்டாக வைக்கற்பாற் றன்று.
இளிவரவு - தாழ்தல். இதனுள் வைக்கற்பாற்றன்று தொழில்.
வி-ரை, இ-ள்: மெய்யுணர்வு கைவரப்பெற்ற ஞானியர்களுக்குத் துறவு நெறியே உளதாக மற்றைக் கூடா வொழுக்கம் உளதாதலும், தூய்மையான பிறஉணவுகள் இருக்க ஊனுண்டல் உளதாதலும், ஒரு பெண்ணிற்கு மணவொலி ஒலிக்க மணந்துகொண்ட கணவன் இருக்கப் பிறிதொரு தெய்வம் உளதாக வணங்குதலும் ஒரு பொருளாக மதிக்கத்தக்கதன்றாம்.
இப்பாடலின் இறுதியில் இருக்கும் ' வைக்கற்பாற்றன்று' என்னும் தொழில்குறித்த ஒருசொல் இளிவரவு, ஊண், தெய்வம் என்ற சொற்களுடன் இயைந்து பொருள்படுதலின், இது கடைநிலைத் தொழில் தீவகம் ஆயிற்று.
10. கடைநிலைப் பொருள்தீவகம்
எ-டு: 'புறத்தன வூரன நீரன மாவின்
திறத்தன கொற்சே ரியவே - அறத்தின்
மகனை முறைசெய்தான் மாவஞ்சி யாட்டி
முகனை முறைசெய்த கண்'
1. 'ஊனளா ' என்பதும் பாடம்.