இதனுள் கண், பொருள். புறத்தன - மான் . ஊரன - அம்பு . நீரன - தாமரை . மாவின் திறத்தன - மாவடு . கொற்சேரிய - வாள் . மகனை முறை செய்தான் - மகன் மிசைத் தேரூர்ந்தான் . வஞ்சி - ஊர் . முகனைமுறை செய்த கண் - முகத்துக்குத் தக்க கண் .
மற்றவைக்கு உதாரணம் வந்துழிக் காண்க .
அஃதேல் , குணம் என்று சொல்லப்பட்டனவும் தொழிலாய்க் காலம் புணர்ந்து நின்றனவால் எனின் ; அவ்வாறே குணமுந் தொழிலுங் காலம் புணர்ந்தல்லது தோன்றா . தொழில் என்பது பொருளது புடைபெயர்ச்சி . குணம் என்பது அப்பொருட்குப் பண்பாய்த் தனக்கு வேறுபொருளின்றிப் பொருளை நீங்காது நிற்பது . அது 1முன்னர் உணர்த்தப்பட்டது .
வி-ரை , இ- ள் : அறநெறி தப்பாது தன்மகனையே தேர்க்காவில் இடறச் செய்து முறையோம்பிய மனுநீதிச் சோழனின் நகரமான வஞ்சியில் இருக்கும் ஒரு பெண்ணின் முகத்திற்கு அழகு தரும்படியான கண்கள் . காட்டிலுள்ள மானின் கண்களைப் போன்றன ; நாட்டிலுள்ள அம்புகளைப் போன்றன ; நீரிலுள்ள தாமரை மலர்களைப் போன்றன ; மாவடுக்களைப் போன்றன ; கொல்லர்களின் சேரியிலே செய்யும்படியான வாள்களைப் போன்றன என்பதாம் .
இப்பாடலில் இறுதியில் இருக்கும் ' கண் ' என்னும் பொருள் குறித்த ஒரு சொல் , புறம் , ஊர் , நீர் , மாவடு , கொற்சேரி ஆகிய சொற்களோடு இயைந்து பொருள்படுதலின் இது கடைநிலைப் பொருள் தீவகம் ஆயிற்று .
கடைநிலைக் குணத்தீவகத்திற்கும் , கடைநிலைச் சாதித்தீவகத்திற்கும் எடுத்துக்காட்டுக்கள் காட்டாது வந்துழிக் காண்க என்றார் உரையாசிரியர் . சுன்னாகம் திரு . குமரசாமிப் புலவர் அவர்கள் கடைநிலைக் குணத்தீவகத்திற்கு மட்டும் எடுத்துக்காட்டுத் தருவர் . அது வருமாறு : -
கடைநிலைக் குணத்தீவகம்
எ-டு : ' ஒருவன் அறிவானு மெல்லா மியாதொன்றும்
ஒருவன் அறியா தவனும் - ஒருவன்
குணனடங்கக் குற்ற முளானும் ஒருவன்
கணனடங்கக் கற்றானு மில் '
கடைநிலைச் சாதித்தீவகம்
எ-டு : ' தன்னெவ்வ நோக்காது தாயர் வெறுத்துளதாம்
என்னெவ்வம் நோக்கும் இகல்விளைப்பான் - மன்னருள்மால்
மோகூரனைத் தொழுதேன் மோகமிகக் காமாகூ
கூகூ வெனுங்கோ கிலம் '
இது மாறனலங்காரத்திற் கண்டது .
தீவகம் பிற அணிகளுடன் கூடிவரும் எனல்
40 . அதுவே
மாலை விருத்தம் ஒருபொருள் சிலேடையென
நால்வகை யானும் நடைபெறும் என்ப .
1. 30 - ஆம் நூற்பாவுரை காண்க .