எ-ன் 1அத்தீவகாலங்காரம் பிற அலங்காரங்களோடுங் கூடி வருமாறு உணர்த்துதல் நுதலிற்று .
(இ-ள்) அச்சொல்லப்பட்ட தீவகம் மாலாதீவகம் , விருத்த தீவகம் , ஒருபொருள் தீவகம் , சிலேடா தீவகம் என நான்கு அலங்காரங்களோடு கூடியும் வருமென்று சொல்லுவர் புலவர் எ-று .
அவற்றுள் ,
1. மாலாதீவகம்
எ-டு : 'மனைக்கு விளக்கம் மடவார் மடவார்
தமக்குத் தகைசால் புதல்வர் - மனக்கினிய
காதற் புதல்வர்க்கும் கல்வியே கல்விக்கும்
ஓதிற் புகழ்சால் உணர்வு '
- நான்மணிக். 105
இல்லறத்திற்கு விளக்கம் , மடப்பத்தினையுடைய பெண்டிர் உண்டாதல் ; அப்பெண்டிர்க்கு விளக்கம் , அழகு சான்ற புதல்வரைப் பெறுதல் ; அப்புதல்வர்க்கு விளக்கம் , இனிமையான கல்வி ; அக்கல்விக்கு விளக்கம் , மறவாமை எ-று .
இதனுள் 'விளக்கம்' என்பதனை எவ்விடத்துங் கூட்டுக .
வி-ரை: மாலை என்னும் அணியுடன் தீவக அணி சேர்ந்துவரின் அது மாலா தீவகமாம் .
இதன்கண் மனைவிக்கு மடவாரும் , மடவாருக்குப் புதல்வரும் , புதல்வர்க்குக் கல்வியும் , கல்விக்கு உணர்ச்சியுமாக ஒன்றோடொன்று தொடர்புடைய பொருள்கள் வந்து மாலைபோல வருதலின் மாலையணி யாயிற்று . 'விளக்கம்' என்னும் சொல் மனை , மடவார் , புதல்வர் , கல்வி ஆகிய பொருள்களோடும் சென்றியைந்து பொருள்படுதலின் தீவகமும் ஆயிற்று .
2. விருத்த தீவகம்
எ-டு : ' வரிவண்டு நாணா மதுமலர் அம்பாப்
பொருவெஞ் சிலைக்குப் பொலிவும் - பிரிவின்
விளர்க்கு நிறமுடையார் தம்மேல் மெலிவும்
வளர்க்கு மலயா நிலம் '
இ-ள்: பொறிவண்டு நாணாக , மது மலரே கணையாகக் காமன் தனி இருந்தாரைப் பொருகின்ற விருப்பத்தையுடைய சிலைக்குப் பொலிவினையும் , பிரிவிற் பசலையுற்றார் தம்மேல் மெலிவினையும் வளர்க்கும் தென்றற் காற்று எ-று .
பொலிவும் மெலிவும் வளர்க்கும் எனக் கொள்க . இதனுள் , ஒரு பொருளே பொலிவும் மெலிவுமாகிய இரண்டு குணஞ் செய்தலின் விருத்தம் .
வி-ரை: விருத்தம் என்னும் அணியுடன் தீவக அணி சேர்ந்துவரின் அது விருத்த தீவகமாம் . விருத்தம் - மாறுபாடு .
இதன்கண் மாறுபாடுடையனவாகிய பொலிவும், மெலிவும் ஆகிய இரு சொற்கள் வருதலின் விருத்தமாயிற்று . அவ்விரு சொற்களுடன் 'மலயா நிலம் ' என்ற சொல் சென்றியைந்து பொருள்படுதலின் தீவகமும் ஆயிற்று .
1. 'அவ்வலங்காரத்திற் சில ஒழிபு உணர்த்துதல் நுதலிற்று ' என்பதும் பாடம் .