பொருளணியியல்97

வி-ரை: நீ பிரியின் மன்மதனுக்கும் இயமனுக்கும் கண்ணில் படாதவாறு இருக்கும் ஓர் உபாயத்தை யருளிச்செல்க எனத் தலைவனுக்கு ஓர் உபாயம் கூறுவதுபோல கூறி , அது அவனுக்கு இயலாததால் , செல்லுதலும் இயலாது என்பது தோன்ற விலக்கினமையின் , இது உபாய விலக்காயிற்று .

(9) கையறல் விலக்கு என்பது தத்தமக்கு வேண்டிய பொருள் மேல் முயலும் ஒழுக்கமின்மை தோன்றக் கூறுவது .

எ-டு : 'வாய்த்த பொருள்விளைத்த தொன்றில்லை மாதவமே
ஆர்த்த அறிவில்லை அம்பலத்துக் - கூத்துடையான்
சீலஞ் சிறிதேயுஞ் சிந்தியேன் சென்றொழிந்தேன்
காலம் வறிதே கழித்து '

இ-ள்: நற்பொருளை விளைத்தற்குக் காரணமாகிய யாதொரு முயற்சியுஞ் செய்யவில்லை ; பெரிய தவத்தைத் தேடிக்கொள்ளத் தக்க அறிவுமில்லை ; சிதாகாசத்தில் ஆனந்தத் தாண்டவஞ் செய்கின்ற நடேசனுடைய மான்மியத்தைச் சிறிதேனும் நினைக்கவில்லை ; ஆதலால் , என் வாணாளை வீணாளாக்கிவிட்டேன் எ-று .

வாய்த்த பொருள் - நற்பொருள் . விளைத்தல் - தேடல் . மாதவம் - பெரியதவம் . ஆர்த்தல் - பிணித்தல் .

வி-ரை: இது காலத்தை வறிதே கழித்தான் ஒருவனின் கூற்றாகும் . நற்பொருளைத் தேடவுமில்லை , நற்றவத்தைச் செய்யவுமில்லை , அம்பலத்தானைச் சிந்திக்கவுமில்லை எனத் தத்தம் பொருள்மேல் முயலும் ஒழுக்கம் இன்மை கூறி , இதுவரை இவை செய்யாமையின் , இனியும் அவை செய்ய இயலா எனக் குறிப்பான் விலக்கலின் , இது கையறல் விலக்காயிற்று .

கையறல் - செய்யாதொழிந்த வினைகளுக்கு இரங்குதல் . சிதாகாசம் - ஞானவெளி .

(10) உடன்படல் விலக்கு என்பது உடன்பட்டார் போல விலக்குவது .

எ-டு : 'அப்போ தடுப்ப தறியேன் அருள்செய்த
இப்போ திவளும் இசைகின்றாள் - தப்பில்
பொருளோ புகழோ தரப்போவீர் மாலை
இருளோ நிலவோ வெழும் '

இ-ள்: குற்றமற்ற பொருளென்ன புகழென்ன இவற்றை உண்டாக்குதற்குப் பிரிந்து போவீர் ! நீர் பிரிந்த அப்பொழுதே இவளுக்கு அடுப்பதொன்றும் என்னால் அறியப்படாது ; நீர் அருளிச் செய்த பிரிவுக்கு இப்போது இவளும் உடன்படா நின்றாள் ; இது கிடக்க , மாலைக்காலம் வந்த பொழுதே அதனோடு இருளோ மதியமோ வருதல் செய்யும் , இதனை நீர் அறிவீர் எ-று .

வி-ரை: இது பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவனைத் தோழி செலவழுங்குவித்ததாகும் .