96தண்டியலங்காரம்

எ-டு : ' மல்லணிந்த தோளாய் ! இதென்கொலோ வான்பொருள்மேற்
செல்க விரைந்தென் றுளந்தெளிந்து - சொல்லுதற்கே
என்று முயல்வலியான் ஏகல்நீ யென்றிடையே
தோன்றுகின்ற தென்வாயிற் சொல் '

இ-ள்: வளப்பத்தினை யுடைய தோளினை உடையாய் ! நீ நன்மை பயக்கும் பொருளின் திறத்தே கடுகிப் போவாயாக என்று என்னுள்ளமானது கலக்கமறச் சொல்லுவதாக நினைத்துத் தொழிற்படாநின்றது ; அதற்குள்ளே ஒரு சொல் போகாதொழிவாயாக என்று சொல்லுவதாகத் தோன்றா நின்றது ; இஃது என்னாகுமோ ? சொல்லுவாயாக எ-று .

மல்லல் - கடை குறைந்தது . கொல் - ஐயம் .

வி-ரை: பொருள்வயிற் பிரிதற்குச் செல்க என்று கூறுதற்கு உள்ளத்தால் யான் முயலினும் , வாயில் வரும் சொல் 'ஏகல்நீ' என்றே வருகின்றது எனத் தோழி , தன் முயற்சி தோன்றக் கூறித் தலைவனுடைய செலவை விலக்கலின் , இது முயற்சி விலக்காயிற்று .

(7) பரவச விலக்கு என்பது தன்வசமல்லாமை தோன்றக் கூறி விலக்குவது .

எ-டு : 'செல்கை திருவுளமேல் யானறியேன் தேக்கமழ்தார்
மல்லகலந் தங்கு மதர்விழியின் - மெல்லிமைகள்
நோக்கு விலக்குமேல் நோவாள் இவள்காதல்
போக்கி யகல்வாய் பொருட்கு '

இ-ள்: இவளைப் பிரிவதே காரியமாகத் திருவுள்ளத்தடைத்துப் பொருட்குப் பிரிவாயானால் , அதன் மேல் அடுக்குங் காரியம் என்னால் அறியப்படாதாகலான் , நறுநாற்றத்தை யுடைத்தாகிய தாரினையும் வளப்பத்தினையும் உடைத்தாகிய நின்னுடைய மார்பின்கண்ணே பிரியாது தங்கப்பட்ட விழியினிடத்து உண்டாகிய மெல்லிய இமைகள் எம்முடைய தலைவன் மார்பினைப் பார்க்கின்ற பார்வையினை விலக்கா நின்றன என்று அதற்கு வருந்துந் தன்மையை யுடைய இவள் , நின்மேல் வைத்த ஆசையினைப் போக்கிப் போவாயாக எ-று .

வி-ரை: ' செல்கை திருவுளமேல் யானறியேன் ' என்பதால் தோழி தன்வயமின்மை கூறி , இவள் காதலைப் போக்கியே நீ பொருட்கு அகல வேண்டும் என்பதால் தலைவனுடைய செலவை விலக்குதலின் . இது பரவச விலக்காயிற்று .

(8) உபாய விலக்கு என்பது விலக்குவதனை ஓர் உபாயங் காரணமாகக் கூறி விலக்குவது .

எ-டு : 'இன்னுயிர் காத்தளிப்பாய் நீயே இளவேனில்
மன்னவனுங் கூற்றுவனும் வந்தணைந்தால் - அன்னோர்
தமைக்கெம்மைத் தோன்றாத் தகைமையதோர் விஞ்சை
எமக்கின் றருள்புரிந்தே யேகு '

இ-ள்: எங்களுடைய இனிய உயிரைக் காக்குந் தன்மையை யுடையையாகிய நீயே பிரியக் கருதினையாயின் , எங்களிடத்து இளவேனிற் காலத்துத் தலைவனாகிய காமனும் , கூற்றுவனும் வந்து சேர்ந்தால் அவர் கண்ணுக்கு நாங்கள் தோன்றாதே யிருப்பதொரு விஞ்சையை எங்களுக்குத் தந்து போவாயாக எ-று .