பொருளணியியல்95

(4) இதழ்ச்சி விலக்கு என்பது விலக்குதற்கு ஏதுவை இகழ்ந்து விலக்குவது.

எ-டு: ஆசை பெரிதுடையேம் ஆருயிர்மேல் அப்பொருள்மேல்
ஆசை சிறிதும் அடைவிலமால் - தேசு
வழுவா நெறியின் வருபொருள்மேல் அண்ணல்
எழுவாய் ஒழிவாய் இனி'

இ-ள்: தலைமை கெடாதவண்ணம் நல்வழிக்கண்ணே யொழுகுகின்ற பொருள் கருதிப் பிரிகின்ற பெரியோனே ! யாம் எங்கள் அரிதாகிய உயிரின் மேல் மிக ஆசை யுடையேம்; நீ நினைத்துப் பிரிகின்ற பொருள்மேல் ஆசையுண்டாதற்குக் காரணஞ் சிறிதுமிலேம்; ஆதலால், நீ பொருள்மேல் ஏகுவாய், அன்றி அதனைத் தவிர்வாய்; எங்கள் தன்மை இது எ-று.

'தேசு வழுவா நெறியின் வரும் அண்ணல்' எனக் கூட்டுக 'தேசு வழுவா நெறியின் வருபொருள்- எனப் பொருட்கு அடையாக்கினும் அமையும்.தேசு-தலைமை. வழுவல்-கெடுதல். நெறி-ஒழுக்கம். எழுதல்-போதல். ஒழிதல்-தவிர்தல். 'இனி' என்றது எங்கள் நினைவிருந்தபடி சொன்னோம், நீ செய்யுமாறு செய் என்றவாறு.

வி-ரை:தோழி தலைவனை விலக்குங்கால், தலைவன் பிரிதற்குக்காரணமான பொருளை அப்பொருள் மேல் ஆசை சிறிதும் அடைவிலமால் எனக் கூறுமாற்றான் இகழ்ந்து அவனுடைய செலவை விலக்கலின், இது இகழ்ச்சி விலக்காயிற்று.

(5) துணைசெயல் விலக்கு என்பது துணைசெய்வாரைப்போலக் கூறி விலக்குவது.

எ-டு:'விளைபொருள்மேல் அண்ணல் விரும்பினையேல் ஈண்டெம்
கிளையழுகை கேட்பதற்கு முன்னே - விளைதேன்.
புடையூறு பூந்தார் புனைகழலாய் போக்கிற்(கு)
இடையூறு வாராமல் ஏகு.'

இ-ள்: மிகுதியாகிய தேன் ஊறுகின்ற பூ மாலையினையும், அலங்கரிக்கப்பட்ட கழலினையும் உடைய தலைவனே! நன்மை பயக்கும் பொருள்மேலே முன்னே இப்போழுதே உன்னுடைய போக்கிற்கு விலக்கு வாராவண்ணம் போவாய் எ-று.

நாங்கள் அறிந்து படுவதற்கு முன்னமே நீ போ என்றவாறு. ஈண்டு இப்பொழுது. விளைதல் - உண்டாதல்.

வி-ரை:பொருள்மேல் விரும்பினையேல் ஈண்டு எம் கிளையழுகை கேட்டலாகிய இடையூறு வருவதற்கு முன்னே ஏகுக எனத் தோழி தலைவனுடைய செலவிற்குத் துணைசெய்வது போலக் கூறினும், அதனால் தாம் இறந்துபடுவோம் என்பதை யுணர்த்துமுகமாக அவனுடைய செலவை
விலக்கலின், இது துணைசெயல் விலக்காயிற்று.

(6) முயற்சி விலக்கு என்பது முயற்சிதோன்றக் கூறி விலக்குவது.