வள்ளல் - அண்மை விளி. வாழ்நாள் - உயிர்மேல் நின்றது.
வி-ரை:இது பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவனைத் தோழி செலவழுங்குவித்ததாம். 'உபாய விலக்கு ' வரை இத்துறையேயாம்.
நீ தலைவியைப் பிரிந்தால் உடனே உயிர் துறந்து விடுவள்;ஆதலின் வேறெருத்தியை மணக்க இப்பொழுதே முயல்க என வன்சொற் கூறித் தோழி அவனுடைய செலவை விலக்கலின், இது வன்சொல் விலக்காயிற்று.
(2) வாழ்த்து விலக்கு என்பது வாழ்த்தி வைத்து விலக்குலது.
எ-டு: 'செல்லு நெறியனைத்துஞ் சேம நெறியாக
மல்க நிதியம் வளஞ்சி்றக்க - வெல்லும்
அடற்றேர் விடலை யகன்றுறைவ தியாங்கவ்
விடத்தே பிறக்க வியாம்.
இ-ள்: வென்றியினையும் வலியினையும் உடைய தேரினை யுடைய வீரனே ! நீ எம்மைப் பிரிந்து போகக்கருதிப் போகும் வழியனைத்தும் உனக்குக் காவலாகிப் பரிகாரஞ் செய்வதாக! நினக்குப் பொருள் வருவாயும் பெருகுவதாக! நீ இப்படிப் பிரிந்து நிலையாக நிற்பது எவ்விடம்? அவ்விடத்தை எங்கட்குச் சொல்ல வேண்டும்; நாங்கள் அவ்விடத்தே யறிந்து பிறப்போமாக எ-று.
இறக்குங் காலத்து உண்டாய நினைவு, இறந்தபின்னர் வந்து ஊட்டும் என்பதனால் அறிக.
வி-ரை:சேம நெறியாக, நிதியம் மல்க, வளஞ் சிறக்க எனத்தோழி முன்னதாக வாழ்த்திப், பின்னர் நீ பிரியின் யாங்கள் இறப்போம். ஆதலின், நீ பிரிந்து செல்லுமிடத்து யாங்கள் பிறப்போமாக எனக்கூறுவதன் மூலம் தலைவனுடைய செலவை விலக்குதலின், இது வாழ்த்து விலக்காயிற்று.
(3) தலைமை விலக்கு எனபது தன்பால் தலைமை தோன்றக் கூறி விலக்குவது.
எ-டு: 'பொய்ம்மை நெறிதீர் பொருளும் மிகப்பயக்கும்
எம்முயிர்க்கும் ஏதும் இடரில்லை - வெம்மைதீர்ந்
தேக வினிய நெறியணிய வென்றாலும்
போக லொழிவாய் பொருட்கு'
இ-ள்: பொய்யாகிய வழியினைத் தப்புவிக்கின்ற பொருளும் பெரிது உண்டாகும்; எங்கள் உயிர்க்கும் ஒர் இடர் உண்டாக மாட்டாது; அவ்வழி நடையும் வருத்தமின்றி இன்பம் உண்டாக்கும்; அவ்வழிதானுஞ் சிறுகித் தோன்றும் என்று சொன்னேமே யாயினும், பொருள் கருதிப்போகின்ற போக்கை நீ ஒழிவாயாக எ-று.
வி-ரை:தலைவனை தோழி விலக்கும் நிலையினளாயினும், நீ பிரியின் 'எம் உயிர்க்கு ஏதும் இடரில்லை' எனத் தம் தலைமை கூறி அதன் மூலமாக விலக்கலின், இது. தலைமை விலக்காயிற்று.
1, ' ஆங்கோர் ' என்பதும் பாடம்.