101 ‘இடை எனப் படுப பெயரொடும் வினையொடும் நடைபெற் றியலும் தமக்கு இயல்பு இலவே’ தொல். சொல். 251 ஆதலின் இவை ஒரு மொழியைப் புறத்தே சார்ந்தோ, ஒரு மொழிக்கு அகஉறுப்பாகி வந்தோ குறிப்பால் பொருள் தரும் இடைசொற்கள் என்றே விளக்கப்பட்டன. அகர இகர உகரங்கள் புறச்சுட்டு ஆயினமைக்கு அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன் என்பன எடுத்துக்காட்டு, அகச்சுட்டு ஆயினமைக்கு அவன் இவன் உவன் என்பன எடுத்துக்காட்டு அகரம் சேய்மையிலுள்ளதையும், இகரம் அணிமையில் உள்ளதையும், உகரம் இடைப்பபட்டதையும் பின் உள்ளதையும் சுட்டும் என அறிக. இங்ஙனமே எப்பொருள், உண்கா, உண்கே, உண்கோ என்பன புற வினாவிற்கு எடுத்துக்காட்டு. எவன், யா, யாவன், ஏவன் என்பன அகவினாவிற்கு எடுத்துக்காட்டு. எவன் என்ற அஃறிணை இருபாற் குறிப்பு வினை தொல்காப்பியனாருக்கு உடன்பாடுஆதல் ‘அத்திணை மருங்கின் இருபால் கிளவிக்கும் ஒத்தது என்ப எவன்என் வினாவே’ தொல். சொல். 221 என்ற நூற்பாவால் உணரப்படும். எவன் என்பதே படுத்தல் ஓசையால் அஃறிணைப் பெயராயிற்று என்று நச்சினார்க்கினியர் தொல்காப்பியம் 122 ஆம் நூற்பா உரையுள் சுட்டியுள்ளார். யாவன் என்ற பெயரே பிற்காலத்து எவன் எனத்திரிந்து உயர்திணை ஆண்பாற் பெயராயிற்று என்பதும் அறிக. எனவே, யாவன் என்பதன் திரிபாகிய உயர்திணை ஆண்பால் பெயரும் வேறு, எவன் என்ற அஃறிணை இருபாற் பொதுவினையும் அதனான் அமைந்த பெயரும் வேறு என்பதனையும் அறிக. |