102 உண்கா, உண்கே, உண்கோ என்பன யான் உண்பேனா என்னும் பொருள்பட வந்தன. இவை ‘தன் தொழில் உரைக்கும் வினாவின் கிளவி’ (தொல்.224). உண்கா என்பது உண்பேனோ என்னும்பொருட்டு எனத் தொல்.224ஆம் நூற்பா உரையில் நச்சினார்க்கினியரும் குறிப்பிட்டுள்ளார். ‘சுட்டு வகரம் மூவினம்உற முறையே ஆய்தமும் மென்மையும் இயல்பும் ஆகும்’ நன். 235 என்ற நூற்பாவில் சுட்டுவகரம் என்ற தொடர் அவ் இவ் உவ் என்னும் பலவின்பால் சுட்டுப்பெயர்களையே குறிப்பதாம். ‘சுட்டின்முன் ஆய்தம் அன்வரின் கெடுமே’ நன்.251 என்ற நூற்பாவில் சுட்டின்முன் ஆய்தம்’ என்பது அஃது இஃது உஃது என்ற சொற்களில் உள்ள ஆய்தத்தையே சுட்டும். இந்நூற்பாக்களில் சுட்டுக்கள் சொற்கு உறுப்பாதல் காண்க. ‘அஇஉஅம் மூன்றும் சுட்டு’ தொல்.31 என இம் மூவெழுத்துக்களும் மொழியாம் தன்மை பெற்றமையின், தொல்காப்பியனார் இந்நூற்பாவினை நூன்மரபின் இறுதியில் மொழிமரபை ஒட்டி அமைத்தமை காண்க. ‘சுட்டு முதல் உகரம் அன்னொடு சிவணி ஒட்டிய மெய்ஒழித்து உகரம் கெடுமே’ தொல்.176 என்ற நூற்பாவில் சுட்டுமுதல் உகரம் என்ற தொடர் அது இது உது என்ற சொற்களில் உள்ள சுட்டுக்களையே குறிப்பதாகும். |