103 ‘சுட்டுமுதல் ஆகிய ஐஎன் இறுதி வற்றொடு சிவணி நிற்றலும் உரித்தே’ தொல். 177 என்ற நூற்பாவில் ‘சுட்டு முதலாகிய ஐ என் இறுதி’ என்ற தொடர் அவை இவை உவை என்ற சொற்களிலுள்ள சுட்டுக்களைச் சுட்டுவதாகும். ‘சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின் ஒட்டிய ஒற்றுஇடை மிகுதல்வேண்டும்’ தொல். 205 என்பது அஞ்ஞாண், இஞ்ஞாண், உஞ்ஞாண் முதலிய புணர்ச்சிகளுக்கு விதி கூறுவது ஆகும். ‘சுட்டின் இயற்கை முற்கிளந் தற்றே’ தொல்.238 என்ற நூற்பா இகரச் சுட்டின் புணர்ச்சி விதி கூறுகிறது. இந்நூற்பாக்களில், மொழிக்குப் பகுதியாக வாராது மொழிப்புறத்தே மொழியை அடுத்துவரும் சுட்டுஇடைச் சொற்கள் சுட்டு என்றே வழங்கப்படுகின்றன. எனவே, சுட்டுத் தனித்துவரும் இயல்பிற்று அன்மையின், பிறிது ஒருமொழியைச் சார்ந்தோ அதற்கு முதல் உறுப்பு ஆகவோ வந்தே பொருள் தருதலின், ‘அ இ உ இவை மொழிமுதல் வரின் சுட்டு’ என்றே நூற்பா யாத்துள்ளார். இலக்கண விளக்கச் சூறாவளி நன்னூலார் மொழி முதற்கண் சுட்டுப்பொருள் உணர்த்தி வரின் அல்லது சுட்டெழுத்து ஆகா என்பார் ‘தனிவரின் சுட்டு’ என்றார். தாமும் அவ்வாறு கூறாது, எவ்வாறு வரினும் சுட்டெழுத்தாம் என்று பொருள்படவாளா ‘மொழி முதல்வரின் சுட்டு’ என்றதுவும் அன்றி, அவர் கருத்து அறியாது குற்றமும் கூறினார். |