பக்கம் எண் :

107

இது மெய் பெறும் பெயர் வேற்றுமை கூறுகின்றது.

(இ-ள்.) ககரம் ஆகிய முதலை உடைய பதினெட்டு எழுத்தினையும் மெய் என்றும், அப்பதினெட்டனுள் கசட தபற என்னும் ஆறனையும் வல்லெழுத்து என்றும், ஙஞண நமன என்னும் ஆறனையும் மெல்லெழுத்து என்றும், யரல வழள என்னும் ஆறனையும் இடையெழுத்து என்றும் பெயரிட்டு ஆள்வர் அறிவுடையோர், பெயர் நிலையை ஆராயும் இடத்து என்றவாறு.

‘உணரின்’ என்றதனால், முதல் சார்பு குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்றல் தொடக்கத்துப் பெயர்களும், ஆவி உடம்பு உறுப்பு ஒற்று உடல் புள்ளி அஃகேனம் தனி நிலை என்றல் தொடக்கத்துப் பரியாய நாமங்களும், ஏகார ஓகாரங்கள் வினாப்பொருள் உணர்த்திவரின் வினா எனப்பெயர் பெறுதலே அன்றிப் பிரிநிலை முதலிய பொருள் உணர்த்திவரின் பிரிநிலை முதலிய பெயர் பெறுதலும், ஒழியிசை முதலியபொருள் உணர்த்திவரின் ஒழியிசை முதலிய பெயர் பெறுதலும், இவை வருதல் பெரும்பான்மையும் ஈற்றின் கண்ணே என்பதும் கொள்க.

இன்னும், அ ஆ முதலிய அ ஆ முதலிய பெயர் பெறுதலும், உயிர்மெய் ஆகிய காலத்தும் உயிர்மெய்க் குறில் நெடில் வல்லெழுத்து மெல்லெழுத்து இடை எழுத்து எனப் பெயர் பெறுதலும், தனி எழுத்திற்கு ஏலாது வல்லினம் மெல்லினம் இடையினம் எனத் தொகுதி பற்றிப் பெயர் பெறுதலும் கொள்க.

இக்குறிகள் ஆட்சியும்காரணமும் நோக்கி, ஒன்றற்கு உரியவாயும் பலவற்றிற்கு உரியவாயும் வரும் எனக் கொள்க. பலவற்றிற்கு உரியவாயும் வரும் என்றலின், அப்பலவும் ஓர் இனம் ஆதலும் பெற்றாம். இவற்றை ஆளுமாறு ஆங்காங்கு உணர்க.