108 உயிர்போல மெய்களை இயக்குதலான் உயிர் என்றும், தமக்கு இனமாகி ஈரளபு இசைக்கும் நெட்டெழுத்துக்களை நோக்கத்தாம் குறியவாய் ஓரளபு இசைத்தலான் குறில் என்றும், தமக்கு இனமாகி ஓரளபு இசைக்கும் குற்றெழுத்துக்களை நோக்கத் தாம் நெடியவாய் ஈரளபு இசைத்தலான் நெடில் என்றும், சுட்டுப்பொருளை உணர்த்துதலான் சுட்டு என்றும், வினாப்பொருளை உணர்த்துதலான் வினா என்றும், மெய்போல உயிரான் இயங்குதலான் மெய் என்றும், மெல்லெழுத்தையும் இடைஎழுத்தையும் நோக்கத் தாம் வல்லென்று இசைத்தலானும் வல்லென்ற தலைவளியால் பிறத்தலானும் வல்லெழுத்து என்றும், வல்லெழுத்தையும் இடைஎழுத்தையும் நோக்கத் தாம் மெல்லென்று இசைத்தலானும் மெல்லென்ற மூக்குவளியால் பிறத்தலானும் மெல்லெழுத்து என்றும், மெல்லெழுத்தையும் வல்லெழுத்தையும் நோக்கத் தாம் இடைநிகரவாய் ஒலித்தலானும் இடை நிகர்த்தாய மிடற்றுவளியால் பிறத்தலானும் இடை எழுத்து என்றும், தம்மால் இயலும் சார்பு எழுத்திற்குக் காரணம் ஆகி முதல் நிற்றலான் முதல் எழுத்து என்றும். அவையே தம்மொடு தாம்சார்ந்தும் இடம்சார்ந்தும் பற்றுக்கோடு சார்ந்தும் தோன்றலான் சார்பு எழுத்து என்றும், ஓர் அளபு இசைக்கும் இகர உகரம் குறுகி அரை அளபு இசைத்தலான் குற்றியலிகரம் குற்றியலுகரம் என்றும், அடுப்புக் கூட்டுப்போல ஆய்தவடிவிற்றாக எழுதப்படுதலான் ஆய்தம் என்றும், உயிரும். மெய்யும் கூடி ஒலித்தலான் உயிர்மெய் என்றும், உயிர் அளபு எடுத்தலான் உயிர் அளபெடை என்றும், ஒற்று அளவு எடுத்தலான் ஒற்றளபெடை என்றும், ஈரளபு இசைக்கும் ஐகாரம் ஒளகாரம் குறுகி ஓர் அளபு இசைத்தலான் ஐகாரக் குறுக்கம் ஒளகாரக் குறுக்கம் என்றும், அரைஅளபு இசைக்கும் மகரம் குறுகிக் கால் அளபு இசைத்தலான் மகரக் குறுக்கம் என்றும், அஆ என்பன ஆஆ என்று இசைத்தலான் அஆ என்றும் காரணக்குறி ஆயினவாறு உணர்க. |