117 லகரமும், அதற்கு இனம் ஆதலின் அதன் பின்னர் வகரமும், இடமும் அளவும் வகரத்தொடு முயற்சியும் ஒத்தலானும் சந்த இன்பத்திற்கு இயைபு உடைமையானும் அதன்பின்னர் ழகரமும், அதற்கு இனம் ஆதலின் அதன் பின்னர் ளகரமும், அளவானும் ழகரம் போலத் தமிழ் எழுத்து ஆகலானும் அவற்றின் பின்னர் றகரமும், அதற்கு இனம்ஆதலின் அதன்பின்னர் னகரமும் தம்முள் இயைய வைக்கப்பட்டன. றகர னகரங்களை வல்லின மெல்லினங்களைச் சார வையாது இறுதிக்கண் வைத்தார். இவை தமிழ்எழுத்து என்பது அறிவித்தற்கும் னகரம் வீடுபேற்றிற்கு உரிய ஆண் மகனை உணர்த்தும் சிறப்பானும் என்று உணர்க. தோற்றம் முதலிய ஒத்தல் அவ்வவ்வதிகாரத்துள் காண்க. ஈண்டுக் காட்டிய ஏதுக்களே அன்றிப் பிற வருவன உளவேனும் கொள்க. சார்பு எழுத்துக்களுள் ஆய்தம், அகர ஆகாரம் போல அங்காந்து கூறும் முயற்சியால் பிறத்தலானும். உயிர் ஏறாது ஓசை விகாரமாய் நிற்பது ஒன்றேனும் எழுத்தியல் தழாஅ ஓசைபோலக் கொள்ளினும் கொள்ளற்க, எழுத்தேயாம் என்று ஒற்றின்பால் படுத்தற்குப் புள்ளி எனப் பெயர் பெறுதலானும் உயிரும் ஒற்றும் ஆகிய இரண்டற்கும் இடையே வைக்கப்பட்டது. ஒழிந்த சார்பு எழுத்துக்கள் தத்தம் முதல் எழுத்துக்களொடு ஒத்த முறையே முறையாக முறைபெற்று நடக்கும் என்று உணர்க. ஐகாரத்திற்கு இகரமும் ஒளகாரத்திற்கு உகரமும் இனம் என்றாரும் உளராலோ எனின், அவர் கூறிய இனம் பற்றி முறை பெறாமையானும். ‘குன்றிசை மொழிவயின் நின்றுஇசை நிறைக்கும் நெட்டெழுத்து இம்பர் ஒத்தகுற் றெழுத்தே’ தொல்.41 |