121 மொழிக்கு முதலாதல் நோக்கி, வல்லினம் மெல்லினம் இடையினம் என இம்முறையே வைத்தார்’ என்றும். ‘அவைதாம் குற்றிய லிகரம் குற்றிய லுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன’ தொல்.2 என்ற நூற்பா உரையில், ‘ஆய்தத்திற்கு வடிவு கூறினார் ஏனை ஒற்றுக்கள்போல உயிர்ஏறாது ஓசை விகாரமாய் நிற்பதுஒன்று ஆகலின்;எழுத்தியல் தழாஅ ஓசைபோலத் தோன்றினும், அவ்வாறு கொள்ளற்க என்பதற்கு ‘எழுத்தோரன்ன’ என்றார்’ என்றும், பல இடங்களில் கூறிய செய்திகளும் எழுத்துக்களின் முறைவைப்புப்பற்றி முதல் நூற்பா உரையுள் குறிப்பிட்ட செய்திகளுள் சிலவும் இவ்வாசிரியரால் கொள்ளப்பட்டமை காண்க. ‘சிறப்பினும் இனத்தினும் செறிந்துஈண்டு அம்முதல் நடத்தல் தானே முறையா கும்மே’ என்ற நன்னூல் (73) நூற்பா வுரையுள், சிவஞான முனிவர் எழுத்துக்களின் முறைவைப்புப் பற்றிக் கூறிய செய்திகள் சாலவும் மேதக்கன ஆதலின், அவற்றைச் சுருங்கக் காண்போம். சிறப்புப் பற்றித் தனித்து இயங்கும் ஆற்றல் உடைய உயிர் முன்னும் அச்சிறப்பில்லா மெய் பின்னும் வைக்கப்பட்டன. உயிருள்ளும் சிறப்புடைய குறில் முன்னும் இனமாகிய நெடில் பின்னும், மெய்களுள் சிறப்புடைய வல்லினம் முன்னும் இனமாகிய மெல்லினம் பின்னும் வைக்கப்பட்டன. பிறப்பிடத்தையும் முயற்சியையும் உட்கொண்டே நெடுங்கணக்கு முறை அமைந்துள்ளது. அஆ-அங்காத்தலால் பிறப்பன. இஈ-அங்காப்போடு அண்பல் முதலை நாவிளிம்புறப் பிறப்பன. |