124 நிறுத்த முறையானே பிறப்புஉணர்த்துவனவற்றுள். இஃது அதன் பொது இயல்பு உணர்த்துகின்றது. இ-ள். உயிர்க்கிழவனது முயற்சியால் எழுகின்ற உதானன் என்னும் காற்றால் நாதம் தலையும் மிடறும் நெஞ்சும் மூக்கும் என்னும் இந்நான்கு நிலைக்களத்தும் சென்று பொருந்தி, இதழும் நாவும் பல்லும் அண்ணமும் என்னும் இந் நால்வகை உறுப்புக்களையும் சார்ந்து. பின்னர் அவற்றது புடைபெயர்ச்சியான் வேறுவேறு வகைப்பட்டு எழுத்து ஓசையாய்ச் செவிப்புலனாக வெளிப்படுதல் எழுத்துக்களது பிறப்பாம் என்றவாறு. வேறு வேறு வகைப்பட்டு எழுத்து ஓசையாய்ச் செவிப்புலனாக வெளிப்படுதல் எழுத்துக்களது பிறப்பாம் எனவே, பரை பைசந்தி மத்திமை வைகரி என்னும் நால்வகை வாக்கினுள், அகத்து எழுவன ஆகிய பரை முதலிய மூன்றனையும் ஒழித்து, ‘எழுந்துபுறத்து இசைப்பது ஆகிய வைகரி வாக்கினையே ஈண்டு இவர் எழுத்துக்களது பிறப்பாம் என்றார் என்பதூஉம் பெற்றாம். அவற்றின் விகற்பம் எல்லாம் சைவஆகமத்தான் உணர்க. ‘எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து சொல்லிய பள்ளி எழுதரு வளியின் பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து அகத்துஎழு வளியிசை அரில்தப நாடி அளவிற் கோடல் அந்தணர் மறைத்தே அஃதுஇவண் நுவலாது எழுந்துபுறத்து இசைக்கும் மெய்தெரி வளிஇசை அளவுநுவன் றிசினே’ தொல்.102 என்றார் ஆசிரியர் தொல்காப்பியனாரும் எனக்கொள்க. முற்கு, வீளை முதலியனவும் முயற்சியான் ஆமேனும், மொழிக் காரணம் ஆகிய எழுத்து ஓசையாய்ப் புலப்படாமையின் ஈண்டைக்கு ஏலா எனக் கொள்க. |