பக்கம் எண் :

132

மெய் எழுத்துக்களின் பிறப்பு

12)முதல்இடை நுனிநா அண்ணம் உறமுறையின்
கஙவும் சஞவும் டணவும் அண்பல்
அடிநா முடியுறத் தநவும் மீகீழ்
இதழ்உறப் பகாரம் மகாரம் இரண்டும்
அண்ணம் சேர்ந்த மிடற்றுஎழு வளியிசை
கண்ணுற்று அடைய யகாரமும் அண்ணம்
நுனிநா வருட றழவும் அண்பல்
முதலும் அண்ணமும் முறையின்நா விளிம்பு
வீங்கி ஒற்றவும் வருடவும் லளவும்
மேற்பல் இதழ்உற வகாரமும் அண்ணம்
நுனிநா ஒற்ற றனவும் தோன்றும்.

இது மேல் பொதுப்பிறவி கூறிய முதல் எழுத்துக்களுள் மெய்கள் இம் முயற்சியால் பிறக்கும் என அவற்றது சிறப்புப் பிறவி கூறுகின்றது.

இ-ள்: முதல் நாவும் முதல் அண்ணமும், இடை நாவும் இடைஅண்ணமும், நுனிநாவும் நுனி அண்ணமும் செறியக் கூறம் முயற்சியான் முறையானே ககரஙகரங்களும், சகர ஞகரங்களும், டகரணகரங்களும், அண்பல் முதலும் நாவினது நுனியும் செறிக்கூறும் முயற்சியான் தகர நகரங்களும், மேல் இதழும் கீழ் இதழும் செறியக் கூறும் முயற்சியான் பகர மகரங்கள் ஆகிய இரண்டும், அண்ணத்தைப் பொருந்திய மிடற்றின்கண்ணே நிலை பெற்று எழாநின்ற காற்றான் ஆய ஓசை அவ்வண்ணத்தை அணைந்து உரல் ஆணி இட்டாற் போலச் செறியக்கூறும் முயற்சியான் யகரமும், அண்ணத்தை நாநுனி தடவக்கூறும் முயற்சியான் ரகரழகரங்களும், அண்பல் அடியையும் அண்ணத்தையும் முறையானே நாவிளிம்பு தடித்துத் தீண்டவும்-தடவவும் கூறும் முயற்சியான லகரளகரங்களும், மேற்பல்லும் கீழ்இதழும்