பக்கம் எண் :

140

(எ-டு) நாகியாது, எஃகியாது, வரகியாது, கொக்கியாது, குரங்கியாது, தெள்கியாது எனவும் கேண்மியா எனவும் வரும். பிறவும் அன்ன, இங்ஙனம் வரும் புணர்மொழியும் ஒரு மொழியும் இடம். இகரம் சார்ந்த வல்லெழுத்தும் மகரமும் பற்றுக்கோடு. வல்லெழுத்தும் மகரமும் போல யகரமும் இகரம் குறுகுதற்கு ஒருசார்பு. 15

விளக்கம்: மேல் சார்பு எழுத்துக்களுக்குப் பிறப்புக் கூறப்பட்டது. அவற்றிற்கு ஏனைய முதல் எழுத்துக்களைச்சார்ந்து வருதலும் ஒருவகைப் பிறப்பே ஆதலின், இயைபு பற்றி சார்பு எழுத்துக்களின் பொதுப்பிறப்பினை ஒட்டி அவை சார்ந்து வரும் பிறப்பும் கூறப்பட்டது என்று மேலைச் சூத்திரத்தோடு இவ்வாசிரியர் இயைபு கூறுகிறார். மேல் பிறப்பு உணர்த்திய சார்பு எழுத்திற்குச் சார்ந்து வருமாறும் ஒரு பிறப்பு ஆதலின், பிறப்பு அதிகாரத்துள் அடக்கி உணர்த்துவான் தொடங்கினார்’ என்பது நன்னூல் விருத்தியுரை- நன். 89

குற்றியலிகரம் புணர்மொழியிடையும் தனிமொழியிடையும் வருமாற்றை இவ்வாசிரியர். இது சுருக்கநூல் ஆதலின். நன்னூலிற்போல ஒரே நூற்பாவில் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியனார் தனித்தனி நூற்பாக்களில் குறிப்பிடுவார். எனவே, குற்றியலிகரம் தோன்றுவதற்கு இடம், பற்றுக்கோடு சார்பு என்பன இந்நூற்பாவினால் போதருகின்றன. நன்னூலார் குற்றியலுகரமே குற்றிலிகரமாகத் திரியும் என்பார். ஆனால் இவர். தொல்காப்பியனார்

‘யகரம் வருவழி இகரம் குறுகும்
உகரக் கிளவி துவரத் தோன்றாது’           தொல்.410

என்று கூறியதை உட்கொண்டு, குற்றியலுகரம் கெட அவ்விடத்தேவரும் இகரம் குற்றியலிகரம் ஆகும் என்பர்.